சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் 07.11.2019 வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணியின் தலைவர் சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் ஐந்து தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிரபாக்கம் வடக்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஜெயசூர்யா சாலை விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அவருக்கும், திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிர் நீத்த குழந்தை சுஜித் மறைவுக்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகம் முழுவதும் பயன்பாட்டுக்கு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தீர்மானம் 2:
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளது. நமது கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டணியின் மூலம் நமக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி இடங்களில் போட்டியிட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றிபெறுவதற்கு முழு மூச்சுடன் செயல்படவேண்டும். நமது கூட்டணியில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை வெற்றியடைய நிர்வாகிகள் பாடுபடவேண்டுமென என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீர்மானம் 3:
அதிகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். மர்ம காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிப்பதற்கும், சிறப்பானதொரு சிகிச்சையை பொதுமக்களுக்கு கொடுத்து வரும் மக்கள் நல்வாழ்வுத்துறையை பாராட்டுவதுடன், பொதுமக்களும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். மேலும் தமிழக அரசு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து சிறப்பு முகாம் நடத்த வேண்டுமென இக்கூட்டம் அரசை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4:
மழைக்காலங்களில் சாலைகள், தெருக்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளதால், பொதுமக்கள் வாகனத்தில் பயணிக்கும் பொழுது அதிக சிரமத்திற்கு உள்ளாவதால், உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக அரசை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5:
பொதுமறை தந்த திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர், அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இது தேவையில்லாத பல மோதல்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும். அதனால் தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது என ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவேன் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர்.