முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டு பகுதிக்கு கூடுதல் தண்ணீர் எடுக்க தமிழ்நாடு பொறியாளர்கள் குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியை ஆய்வுசெய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு - கேரளா எல்லையான தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. தற்போது வடமேற்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நிரம்பிவருவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது.
தற்போது நீர்மட்டம் 141 அடிக்கு கீழ் இருந்துவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் கேரளா தரப்பிலிருந்து இடைஞ்சல்கள் வருவது வழக்கமாக இருந்தது. தற்போது கேரளாவில் சிலர் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று அவதூறு செய்திகளையும் பரப்பிவருகிறார்கள். தற்போது கூட கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள செருதோணி நகரத்தில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியாக்கோஸ் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் உண்ணாவிரதமும் இருந்துவருகிறார்கள்.
இப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் கேரளாவில் சிலர் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது நடைமுறையாகவும் இருந்துவருகிறது. இந்நிலையில் நேற்று (03.12.2021) தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி தலைமையில், மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி, பெரியார் வைகை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் ஆகியோர் கொண்ட குழு முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று அங்குள்ள மெயின் அணை, பேபி அணை மற்றும் ஷட்டர் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதோடு அணையில் 142 அடி தண்ணீர் நிலை நிறுத்துவது, தமிழ்நாட்டு பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் எடுப்பது தொடர்பாக தலைமதகு பகுதி குமுளி மலைப்பகுதியில் உள்ள போர்பே அணை ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அதோடு மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்திற்குச் சென்று அங்குள்ள பென்னிகுக் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். இதில் பெரியார் அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர்கள் ராஜகோபால், குமார், பிரவீன்குமார், பரதன், ஏனஸ்டோ, முரளிதரன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.