கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன். இவர் பெண்கள், சிறுமிகள் சம்பந்தப்பட்ட புகார்களை உடனுக்குடன் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக தனி உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் விருத்தாசலம் அருகில் உள்ள கோ.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு அந்த சிறுமி சம்மதிக்கவில்லை கட்டாயத்தின் பெயரில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இது குறித்து லேடிஸ் பஸ்ட் காவல்துறை எண்ணுக்கு அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.
அதைக் கண்காணித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோரிடம் உரிய வயது வருவதற்குள் சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தினார்கள். மீறி திருமணம் நடந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருமண வயது வந்த பிறகு திருமணத்தை நடத்துகிறோம் தற்போதைக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர். அதேபோன்று பரிபூரணம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தனது கணவர் சந்திரமோகன் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துவதும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் லேடிஸ் பஸ்ட் எண்ணுக்கு புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் ஒரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் ராஜலட்சுமி வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் ராஜலட்சுமியின் கணவன் சந்திர மோகன் அவரது மனைவியை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய விஷயம் உண்மை என தெரியவந்தது.
மேலும் சந்திரமோகனின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆபாசமாக பேசி பாரதியை திட்டுவதாகவும் அடிக்கடி அவரிடம் தகராறு பிரச்சனை செய்து வருவதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் பாரதி கூறியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து எச்சரிக்கை செய்தனர். பாரதியிடம் இனிமேல் எந்த பிரச்சனை தகராறு செய்யக்கூடாது பிரச்சனை செய்தால் உங்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததோடு தகுந்த அறிவுரை வழங்கினார்கள்.
அவரும் இனிமேல் அங்கு போக மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். இதேபோன்று லேடிஸ் பஸ்ட் உதவி எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் மட்டும் 52 புகார்கள் வந்துள்ளது. அவற்றில் ஆறு புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 புகார்களுக்கு சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து புகார்களுக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் நேரில் சென்று உரிய விசாரணை நடத்தி தீர்வு கண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். பெண்கள் சிறுமிகள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு எந்த நேரத்திலும் கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெளியிட்டுள்ள லேடிஸ் பஸ்ட் எண்ணுக்கு புகார் செய்து தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.