கஜா புயலால் கபலிகரம் செய்யப்பட்ட கடலோரக்கிராமங்களை பேய்பிடித்து ஆட்டுவதாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மருத்துவர்களைவிட அங்குள்ள பெண்சாமியாடியையே நம்புகின்றனர் என்பது தான் விநோதம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள கடலோரக்கிராமம் புஷ்பவனம். பசுமைக்கு பஞ்சமில்லாத அந்த கிராமத்தில் விவசாயத்தையும், மீன்பிடித்தொழிலையும் செய்யும் மக்கள் சரி சமமாகவே அங்கு இருக்கின்றனர். அந்த கிராமத்தின் கடலோர பகுதியில் சுமார் 300 க்கும் அதிகமான மீனவகுடும்பங்கள் வசிக்கின்றனர்.
புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட அம்மக்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமை நம்பியே நாட்களை நகர்த்துகின்றனர். கஜா புயலின் பேய்காற்றால் கடல்சேர் முழுவதும், அவர்களின் வீடுகளிலும், வீதிகளிலும் நிரம்பி மக்களின் இயல்புவாழ்க்கைக்கு வேட்டு வைத்துள்ளது. மின்சாரமும், நடமாட்டமும் இல்லாமல் பொழுதாகினால் பேயடைந்த கிராமமாகவே மாறிக்கிடக்கிறது. இந்த சூழலில் புயலடித்த சிலநாட்களில் அங்குள்ள மக்களை பேய் பிடித்து ஆட்டுவதாககூறி, பீதியில் பகலிலும் முகாமிலேயே உறைந்துக்கிடக்கின்றனர். உடலளவில் பாதிக்கப்பட்டு பேய்பிடிது ஆடும் சிலரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வைத்தியம் செய்தும் குணமாகாத நிலையில், அந்த கிராமத்தில் உள்ள பெண் சாமியாடி மகாலெட்சுமியே விரட்டுகின்றாராம்.
அந்தகிராமத்திற்குள் பயணித்தோம், புயலால் கிராமே கடல்சேராக காணப்பட்டது, மூன்று இயந்திரங்களைக் கொண்டு கடலுக்கு போகும் வழியில் உள்ள சேற்றை டிரோக்டர் மூலம் அள்ளிக்கொண்டிருந்தனர். அங்கு சேற்றில் புதைந்து சேதமான பகுதிகளை கண்ணத்தில் கைவைத்து பார்த்தபடியே நின்ற மாணிக்கத்திடம் பேயாட்டம் குறித்து விசாரித்தோம், " எத்தனையோ என்னோட வயசுக்குப்பார்த்திருக்கேன் ஆனா இப்படியொரு புயல பார்த்துகிடையாது, எங்களுக்கு தெரிஞ்சது கடலும் அதுல இருக்கிற மீனும், படகும்தான், ராத்திரி 2 மணிக்கு கூட கடற்கரைப்பக்கம் போவோம். ஆனா புயலுக்குப்பிறகு எங்களுக்கு கடலைத் தவிர எதுவும் மிச்சமில்ல சேத்த அள்ள இன்னும் ஆறுமாசத்துக்கு மேல ஆகும். புயலுக்கு முதல்நாள் போன கரண்ட் இன்னும் வரல, விவசாய கிராமமக்களுக்கு புயலால் அழிவுன்னா, எங்களுக்கு புயலோடு புயல்கொண்டுவந்த சேற்றாலயும் அழிவுவந்துடுச்சி.
ஊரே இருண்டு கிடக்கிறதால செத்துப்போனவங்க எல்லாம் ஆவியா கிளம்பி கிராமத்தையே ஆட்டிவைக்குது. பெரியவங்க, சின்னவங்கன்னு எல்லாருக்கும் திடீர் திடீரென ஜீரம் வருது. ஆஸ்பத்திரிக்கு போனாலும் குணமாகாது சாமியாடி மகாலட்சுமி அம்மாதான் எந்நேரமா இருந்தாலும் விபூதி போட்டு எலுமிச்சங்கா அறுத்து பேய விரட்டி எல்லையத்தாண்டி விடுது. அந்த அம்மாவை ஓடிப்போய் கூப்பிடுவோம். உடனே வருவாங்க. பூஜைபோட்டு எலுமிச்சம்பழம் காவு கொடுத்து ஆளுங்களை பிடித்த பேயை ஊர் எல்லையைத் தாண்டி விரட்டிவிடுவாங்க. அரசாங்கம் புயலடிச்சி ஒருவாரம் கழிச்சிவந்தாங்க, அப்புறம் கவர்னர் வராருன்னு கடலுக்கு போகிற வழியில மணல்கொண்டுவந்துக்கொட்டினாங்க, அதோட சரி வேற எதுவும் நடக்கல," என்று கூறிக்கொண்டே பொழுதாகிடுச்சி நீங்க கிளம்புங்க நான் கிளம்புறேன்னு கூறிக்கொண்டே புறப்பட்டார்.
சாமியாடி மகாலெட்சுமியை தேடி வீதி,வீதியாக சென்றோம், ஒரு வழியாக வெண்ணீர் சுடவைக்க ஓலையோடு எதிரே வந்தார், அவரிடம் கிராமத்தில் நடப்பதை கேட்டோம், "எங்களைப்போல உள்ள கடற்கரை கிராமங்களுக்கு காவலாக இருப்பதே ஏழு கன்னியம்மன் தான். அந்த கோயில் முழுவதும் கடல் சேறு புகுந்து, நாங்க அங்க போகவோ, அங்கிருக்கும் கடல்கண்ணிகள் காவலுக்கு வெளியில் வரமுடியாத நிலையாகிடுச்சி. அதோட கரண்ட் இல்லாம ஊரே இருண்டுக்கிடக்கிறதால செத்துப்போனவங்க ஆவிகளா வெளியில் சுத்த ஆரம்பிச்சிடுச்சிங்க. ஆவிங்க நடமாடும் நேரத்துல யார் தென்பட்டாலும் அவங்க மேல ஆவிங்க புகுந்து ஆட்டுவிக்குது.
உடனை மருத்துவமனைக்கு போவாங்க அதுலயும் குணமாகாம என்ன கூப்பிடுவாங்க நான் அர்த்த ராத்திரியானாலும் போய் பூஜை செய்து, எலுமிச்சைப்பழம் காவு கொடுத்து, ஏழு கன்னியம்மனை வேண்டிக்கொண்டு சாமிஆடுவேன். சாமி ஆடும்போது என்ன நடக்குதுன்னு எதுவும் எனக்குத் தெரியாது. ஆவியை விரட்டியதும் அமைதி ஆகிடு வாங்க, தினமும் நான்கைந்து பேருக்காவது பேய் பிடித்து விரட்டுறேன். அதுக்காக யாரிடமும் தட்சணையாக ஒரு பைசாகூட வாங்குவது கிடையாது. ஏதோ கண்ணிகள் கொடுத்திருக்கும் சக்தியால நாலு பேருக்கு நல்லது பண்றேன். " என்கிறார் வெகுளியாக.
ஒரு புறம் கஜாபுயலின் கோராதாண்டவம் ஆடியதில் வீடிழந்த சோகம், மற்றொரு புறம் கடல் சேற்றால் அவதி, இன்னொருபுறம் வாழ்வாதாரமாக இருந்த படகுகளும், வலைகளும் கண்ணுக்கு முன் சிதைந்துக்கிடப்பதையும் கண்டு நொந்தவர்களுக்கு பேயாட்டமும் பாடாய்படுத்துவதாக சோகத்தின் உச்சத்தில் உறைந்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் அரசின் உதவி வேண்டும்.