Skip to main content

சௌந்தரராஜ பெருமாள் கோவில் அறநிலையத்துறைக்குச் சொந்தமா? தனியாருக்குச் சொந்தமா? - குழப்பத்தில் பக்தர்கள்

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

 Soundararaja Perumal temple issue

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வரும் கோயில் தாடிக் கொம்பில் இருக்கும் சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆகும். இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நாளை 28 ஆம் தேதி புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெற இருக்கிறது. ஆனால் இக்கோவிலில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மில் தொழில் அதிபர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தங்களுடைய சொந்த கோயில் போல் நடத்தி வருவதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 

குறிப்பாகக் கும்பாபிஷேக திருப்பணிகள், வேலுச்சாமி மற்றும் கந்தசாமி எஸ்.எஸ்.எம். குரூப் முன்னிலையில் நடைபெறுவதாகக் கடந்த சில நாட்களாகத் தினசரி  நாளிதழ்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். அதுவும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான சவுந்தரராஜ பெருமாள் கோயில் பெயரைச் சொல்லி பெரிய வியாபார நிறுவனங்களில் விளம்பரத்தை வாங்கிக் கொண்டு லோக்கலில் உள்ள இரண்டு அமைச்சர்கள் பெயரையோ (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி) அறநிலையத்துறை அதிகாரிகள் பெயரையோ போடாமல் தங்கள் பெயரை மட்டும் போட்டுக் கொண்டு அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு ஒரு தனியார் எஸ்.எஸ்.மில் உரிமையாளர்கள் செயல்பட்டு வருவது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது எனப் பக்தர்கள் ஒருபுறம் புலம்பி வருகிறார்கள்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இணை ஆணையர் மற்றும் உதவி இயக்குநர் தலைமையில் தான் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்படி இருக்கும்போது தாடிக் கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தொடர்ந்து ஒரு சமூகத்தைச் சேர்ந்த  தொழில் அதிபர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தங்களுக்குச் சொந்தமான தனியார் கோயில் போல் செயல்பட்டு வருவதால் தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களையும் சரிவரக் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்தும் இருக்கிறார்கள். இதை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். 

 

 Soundararaja Perumal temple issue

 

அதுபோல் இக்கோவிலில் எந்த ஒரு நிகழ்ச்சி மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கூட கோவில்  செயல் அலுவலர், தொழில் அதிபர்களைக் கேட்டுத்தான் செயல்பட்டு வருகிறார். அது போல் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக ஒரு சில கோயில் குருக்கள் செயல்படுவதால் கோவிலின் ஆகம விதிமுறைகள் அடிக்கடி மீறப்படுவதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொர்க்க வாசல் திறப்பின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தாடிக் கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் மட்டும் தொழில் அதிபர்களுக்காக பெருமாளை காக்க வைத்து ஏழு மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனால் ஆகம விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகப் பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்த கட்சியினர் வால்போஸ்டர் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

 

ஏற்கனவே திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது இந்த தனியார் மில் உரிமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் கோயில்களின் ஆகம விதிகள் மீறப்பட்டு கருவறைகள் கட்டப்பட்டன. அந்தக் கருவறைகள் தொகுப்பு வீடு போல் கட்டப்பட்டதால் அதற்கு பரிகாரமாக தெற்கு நோக்கி அபிராமி அம்மன் உருவப்படம் வைத்த பின்பு பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். அதுபோல சௌந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திலும் நடந்து விடக்கூடாது என பக்தர்கள் நினைக்கிறார்கள். அதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் ஏற்பட்ட தனியார் ஆதிக்கத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.

 

இது சம்பந்தமாக மாவட்ட இந்து அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் பாரதியிடம் கேட்டபோது, “இது சம்பந்தமாக என்னிடமும் புகார் வந்ததின் பேரில் அந்த தனியார் மில் உரிமையாளர்களைப் பல முறை கூப்பிட்டு எச்சரித்து இருக்கிறேன். ஆனால் கோயில் இ.ஓ.துணையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அதனால் என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கூறினார். இப்படி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டு அமைச்சர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் மனம் நொந்து போய் வருகிறார்கள். இதனால் நாளை நடைபெற இருக்கிற கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வியும் பக்தர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்