தமிழகத்தில் நாளை (19.01.2021) 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி உள்ளார்களா என்பது குறித்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கேம்பியன் தனியார் பள்ளியில் உடல் நலம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து திருச்சி மண்டல தலைவரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேர்வு வாரியத் தலைவர் நிர்மல்ராஜ், “மாணவர்கள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. வருகைப் பதிவேடு என்பது பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படாது. கண்டிப்பாக பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தோடு மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 506 பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 75 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என திருச்சி நகரத்தில் 172 பள்ளிகளும், லால்குடி பகுதியில் 114 பள்ளிகளும், முசிறியில் 91 பள்ளிகளும், மணப்பாறை பகுதியில் 129 பள்ளிகளும் என மொத்தம் 506 பள்ளிகள் நாளை (19.01.2021) முதல் செயல்பட உள்ளன.
மூன்று பள்ளிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு பள்ளிகள் துவங்கும் நாள் முதல் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.