சண்டாளர் என்ற சமூக பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய பரிந்துரை அளித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பொதுவெளியில் பட்டியல் இனத்தவர்களின் பெயர்களை இழிவான முறையில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் 'சண்டாளர்' என்ற வகுப்பைச் சேர்ந்த பெயரில் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினர் அட்டவணையில் 48 வது இடத்தில் இந்தச் 'சண்டாளர்' என்ற சமூக பெயர் இடம் பெற்றுள்ளது.
இப்பெயரை பொதுவெளியில் நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கிலோ இனி அந்தச் சொல்லை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சித்து பாடல் ஒன்றைப் பாடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்த, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் இதனைப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.