காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிழந்த பலரின் மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாசும், அவருடைய மகன் அன்புமணி ஆகியோர்தான் காரணம் என்று, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்னியர் சமூகத்தினருக்கு எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அண்மையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் ஆதாயத்திற்காக திமுக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டதாக பாமக பகிரங்கமாக குற்றம் சாட்டியது. பின்னர் திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் வன்னியர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது யார்? என்பது குறித்து பரஸ்பரம் அறிக்கைப்போர் நடத்தி வருகின்றன. இதற்கிடையே, சேலத்தைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அருள், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், ''கலைஞர் உயிருடன் இருக்கும்போது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்று பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட கட்சியின் முன்னோடிகள் சிலர் முன்மொழிந்தனர். அப்போதே அதற்கு வீரபாண்டி ஆறுமுகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை மனதில் வைத்துக்கொண்டுதான், சேலம் அருகே சில ஆண்டுக்கு முன் நடந்த ஆறு பேர் கொலை வழக்கில் தேவையில்லாமல், வீரபாண்டியாரின் சகோதரர் மகன் சுரேஷ்குமார் மீது வேண்டுமென்றே காவல்துறை மூலம் வழக்குப்பதிய வைத்தார் மு.க.ஸ்டாலின்.
இதனால் அவர் மனம் உடைந்து போனதால் உடல்நலம் குன்றியது. அதன்பிறகே அவர் மருத்துவமனயையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வீரபாண்டி ஆறுமுகம் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்போம்,'' என்று கூறியிருந்தார். அருளின் பேட்டி, ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''எந்த தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணம் குறித்து பாமக அருள் தெரிவித்த கருத்துகளை ஏற்க முடியாது. என் தந்தை இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வரவில்லை. இப்போது தேவையின்றி அவருடைய மரணத்தை வைத்து பாமகவினர் ஆதாயம் தேட பார்க்கின்றனர். அவருடைய மரணத்தைப் பற்றி பேச பாமகவுக்கு அருகதை கிடையாது. வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுகதான். திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதை பாமக வரவேற்க வேண்டுமே தவிர, தனது கட்சிக்காரர்களை வைத்து பேட்டி கொடுத்து வருகிறார்.
தற்போது அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது. அக்கட்சியிடம் இதுநாள் வரை ஏன் உள்ஒதுக்கீடு கேட்கவில்லை? காடுவெட்டி குரு மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிழந்தவர்களின் இறப்புக்கு ராமதாசும், அன்புமணியும்தான் காரணம். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். எனக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசி வருகின்றனர். பாமக அருள் மீது வழக்கு தொடர்வது குறித்து திமுக தலைமையிடம் பேசி முடிவு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டும், அதிமுகவில் சீட் பெற வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு பேசி வருகின்றனர்,'' என்றார் வீரபாண்டி ராஜா.