கரூர் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து, பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடைகளில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
மாநகரப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள முருகநாதபுரம் கடைவீதியில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் முடிச்சு கவர், பிளாஸ்டிக் கப், மெழுகு தடவிய பேப்பர் கப், தட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், 10 கடை உரிமையாளர்களுக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த திடீர் ஆய்வில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து இனிமேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்வதோடு, கடை சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.