ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல சமுதாயத்தினர் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசியதால் ஒன்றிய, நகர செயலாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பேரூராட்சியில் இருக்கும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பல்வேறு சமுதாயத்தினர் வழிபட்டு வருகின்றனர். இதில் ஒரு சமுதாயத்திற்கு மட்டும் பாத்தியப்பட்ட கோவில் என்று பிரச்சனை எழுந்தது.
இது குறித்து பிற சமுதாயத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதியரசர்கள் மறு உத்தரவு வரும் வரை சாமி கும்பிட தடை உத்தரவு பிறப்பித் துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25.7.2019 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இ.கம்யூ.கட்சி ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், நகர செயலாளர் பிச்சை மணி ஆகியோர் தடை உத்தரவு அமுலில் இருக்கும் போது முத்துமாரியம்மன் கோவில் பிரச்சனையை பேசி, ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாகப் பேசி, பல சமுதாய மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தியும், நீதிமன்றத்தையும், அதிகாரிகளையும் அலட்சியம் படுத்தியும், வழக்கு தொடர்ந்தவர்களை ஒருமையில் பேசியதாகவும் கூறி , எஸ்.எம்.ராஜா என்பவர் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.