மாணவர்களின் சீர் கெட்ட நடவடிக்கைகளால் அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியை தரையில் உரசி தீப்பொறி வர வைத்தவாறு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கல்லூரி மாணவர்கள் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தெரிய வந்துள்ளது. இக்காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், ரூட்டு தலை என்கின்ற பெயரில் கெத்து காட்டுவதற்காக இச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, குறிப்பாக ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து செல்லும் 55 என்ற எண் கொண்ட பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.