பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறி ரூ.63-இலட்சம் வசூல்; முதல்வருக்கு புகார்
ஈரோடு அருகிலுள்ள சித்தோட்டில் உள்ள தமிழக போக்குவரத்து துறைக்கு சொந்தமான சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் பலஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி விடுதி கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் என்பாவர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக மேலிடத்தில் சொல்லி தற்காலிய பணியாளர்களுக்கு பணி நிரத்தரம் செய்ய ஏற்ப்பட்டு செய்வதாக கூறி, 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம், மொத்தம் 63 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிகிறது.
குறிப்பிட்ட காலத்துக்குள் பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு, அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்கிக்கொடுத்து சண்முகசுந்தரம் இந்த பணத்தை வசூல் செய்துள்ளார். ஆனால், இதுவரை தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை.
இதனால் சந்தேகம் கொண்ட ஊழியர்கள் சண்முகசுந்தரம் வசூலித்த பணத்தை திருப்பி பெற்றுத் தரவேண்டும். நீதிமன்ற ஆணைப்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, பெரியார் மாவட்ட கல்லூரி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சார்பில் முதல்வருக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிவசுப்பிரமணியம்