தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அதுகுறித்து புத்தகம் வெளியிட்டு, அதன் வெளியீட்டு விழாவிலும் பேசியுள்ளார்.
மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை, ''பத்ராசலத்தில் மழை வெள்ளம். அங்கே மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். நான் தத்தெடுத்த இரண்டு மலைவாழ் கிராமங்கள் அதற்குள்ளே இருக்கிறது. ஏனம் பகுதிக்கு நான் செல்கிறேன். ஏனத்திற்கு போவது மிகவும் கஷ்டம். பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநராக ஏனத்துக்கு போகிறேன். ஏனத்திற்கு ஏன் வெள்ளம் வந்தது என்றால் பத்ராச்சலம் மூழ்கியது. அதனால் ஏனத்திற்கு வெள்ளம் வந்தது. எனவே பத்ராசலத்திற்கு போக வேண்டுமே என்று நினைத்தேன். ஆனால் அன்று இரவு நமது ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிரிவு உபச்சார விழா. எல்லா ஆளுநர்களையும் அழைத்திருக்கிறார். நான் அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு 'ஐயா நான் இந்த ஆளுநர் விருந்துக்கு வர இயலாது. ஏனென்றால் பத்ராசலம் நீரில் மூழ்கி இருக்கிறது. அங்கே நான் தத்தெடுத்த இரண்டு கிராமங்கள் இருக்கிறது. நான் அங்கே போக வேண்டும்' என்று சொன்னேன்.
உடனே ஆளுநர் தமிழிசை வெள்ளம் சூழ்ந்துள்ள இடத்திற்குச் செல்கிறார் என்று பிளாஷ் நியூஸ் வருது. அடுத்த அரை மணி நேரத்தில் முதலமைச்சரும் அங்கே செல்கிறார் என்ற செய்தி வருகிறது. அதுவரை தனது தோட்டம் சூழ்ந்த பங்களாவில் தூங்கிக் கொண்டிருந்த முதல்வரை வெளியே வர வைத்த திறமை இந்த ஆளுநருக்கு இருக்கிறது. பிறரை வேலை செய்ய வைக்கும் அந்த திறமை இருக்கிறது என்னிடம். நான் சென்ற ஐந்து மணி நேரத்திற்கு பின்னால் முதல்வர் காரில் அந்த இடத்திற்கு வருகிறார். உடனே எல்லோரும் என்னிடம் கேட்டார்கள் 'ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, மழை வெள்ளத்தால் மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது' என்று கேட்டார்கள். உடனே நான் சொன்னேன் 'செய்ய முடிந்தவரை அங்கே வர வைத்தது தான் எனது திறமை' என்றேன்.
நான் மருத்துவராக இருக்கும் பொழுது என்னை பார்த்தவர்களுக்கும், தலைவராக இருக்கும் பொழுது பார்ப்பவர்களுக்கும் வித்தியாசம் அதிகமாக இருக்கும். என்னுடைய உடை நேர்த்திலிருந்து என்னை பார்த்தாலே பயப்படும் அளவிற்கு ஒரு பலமான மருத்துவர் நான். யாரோ சொன்னார்கள் ரஜினிகாந்திற்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை என்று சொன்னார்கள். பதினாறு வயதினிலே ரஜினியை படத்தில் என்னவென்று கூப்பிட்டார்கள். அதேதான் என்னையும் கூப்பிட்டார்கள். சுருட்டைதான் உனக்கு பலம் என்று அம்மா சொல்வார்கள். ஆனால் பரட்டை தான் எனக்கு பலமாகிவிட்டது'' என்றார்.