திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (06.11.2021) இரவு விடிய விடிய 68.6 மிமீ அளவில் கனமழை பெய்து தீர்த்தது. நகர பகுதிகளில் போதிய வடிகால் நீர்வழி பாதைகள் இல்லாததால் மணப்பாறை பேருந்து நிலையம், முத்தன் தெரு, புதுத்தெரு, ராஜீவ் நகர், எம்.ஜி.ஆர். நகர் அத்திக்குளம், வாகைக்குளம், சிதம்பரத்தான்பட்டி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் முனியப்பன் சுவாமி குளத்தில் குளம் நிரம்பியதால் கரையைப் பாதுக்காக்கும் பொருட்டு நீர் வெளியேறும் வகையில் கால்வாய்களில் நீர் செல்ல நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு கரிக்கான்குளம் தெரு, முனியப்ப சுவாமி நகர், மஸ்தான் தெரு, வண்டிப்பேட்டைத்தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடிவருகிறது.
அதேபோல், சோலைப்பட்டி – பாட்னாப்பட்டி இடையே சீகம்பட்டி சோலைகுளம் நிரம்பி வெளியேறிய வெள்ளம் சாலை போக்குவரத்தைத் துண்டித்தும், வீடுகளில் புகுந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. வடிகால் பாதை தூர்வாராமல் இருந்ததால் வெள்ள நீர், அருகில் சம்பா பயிட்டிருந்த விளை நிலத்திற்குள் புகுந்து நடப்பட்ட நாத்துகள் நீரில் மூழ்கின. அதேபோல், சித்தாநத்தம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. சீகம்பட்டி அய்யாக்கண்ணு – வள்ளியம்மை வீட்டின் சுவர் ஒருபகுதி இடிந்து விழுந்தது. திருமலையான்பட்டி அழகர்சாமி மகன் சின்னழகன் வளர்த்த 5 வயது மதிக்கத்தக்க பசுமாடு இடி தாக்கியதில் இறந்தது. மழை, வெள்ள பாதிப்புகளையும், விளைநில பாதிப்புகளையும் வருவாய்த்துறையினர் தணிக்கை செய்துவருகின்றனர்.