/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MKS433222.jpg)
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுககூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றதிமுகதலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிகழ்வின்போது, திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. மற்றும் கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
கடிதத்தைப் பரிசீலித்த ஆளுநர், திமுகதலைவர் மு.க. ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைக்கிறார். அத்துடன் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (06/05/2021) அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் ஆகியோர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே, மு.க. ஸ்டாலினுக்கு அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி வாழ்த்துதெரிவித்துள்ளார். அதில், "தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார். முதலமைச்சராக நாளை என் தம்பி மு.க. ஸ்டாலின் பதவியேற்பதில் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)