இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், விண்ணரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பல்கலைக்கழகத்தின் இலவச பேருந்து சேவையை நிறுத்திவிட்டு புதுவை மாநில மாணவர்களுக்கு மாநில அரசாங்கமே இலவச பேருந்தை இயக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது பொருத்தமற்றது. இது உள்நோக்கம் கொண்டதாகும்.
கல்வி கட்டண கொள்ளை மூலம் நிதி திரட்டுகிற புதுவைப் பல்கலைக்கழகம் அந்த நிதியை மாணவர்களுக்கே பயன்படுத்த வேண்டும். நிதி சுமையை மாநில அரசிடம் தள்ளிவிடக்கூடாது. தனக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற வேண்டியது ஒரு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமை ஆகும். ஒரு புறம் கட்டணக் கொள்ளை மறுபுறம் மாணவர் சேவைகளை முடக்கி வைப்பது முறையாகாது.
மத்திய அரசின் நிதி மறுப்புக் கொள்கைக்கு எதிராக இதுவரை பேசாத மத்திய பல்கலைக்கழக நிர்வாகிகள் நிதி சுமையை மாநில அரசிற்கு மடைமாற்றம் செய்ய முயல்வது எந்த விதத்தில் முறையாகும். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பயணிக்கும் பேருந்து சேவையை தொடர்ந்து கட்டணமின்றி இயக்க வேண்டும், நடப்பு கல்வியாண்டில் உயர்த்தப்பட்ட அநியாய கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு வலியுறுத்துகிறது.
1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு 816 ஏக்கர் விவசாய நிலத்தை புதுவை அரசு இலவசமாக அளித்தது. மேலும் புதுவை அரசு மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை மானிய விலையில் அளித்து வருகிறது. ஆனால் புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழகம் பெரிய அளவில் உதவவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை, அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவில்லை, மாநில வளர்ச்சிக்கு தேவையான பொருத்தமான ஆய்வுகள் மேற்கொள்வதில் உதவவில்லை.
இவ்வாறான சூழலில் மாநில அரசாங்கம் புதுச்சேரி பல்கலை கழகத்துக்காக இலவச பேருந்து இயக்குவது என்பது உண்மை தன்மையை மூடி மறைப்பதாகும். புதுவைப் பல்கலைக்கழகம் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கும், படித்து முடித்த தகுதியான இளைஞர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. 1990களில் நடைபெற்று வந்த பட்டமேற்படிப்பு பிரிவுகளில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு முடிவின்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. புதுவை கென்று தனி பல்கலைக்கழகம் இல்லாத சூழலில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தையே நம்பி இருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கூடிய பட்டமேற்படிப்பு பிரிவுகள் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டாலும், இப்புதிய பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இந்நிலையில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்டப்படிப்பு பிரிவுகளிலும் புதுவை மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடி வந்ததின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு புதுவைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு அனைத்து பட்டமேற்படிப்பு பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. ஆனால் இன்று வரை புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு முடிவு அமல்படுத்தாத சூழ்நிலை நிலவி வருகிறது. புதுச்சேரி அரசு இதுவரை 2 முறை புதுச்சேரி சட்டமன்றத்தில் இது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றியும் இத்தீர்மானத்தை சற்றும் மதிக்காமல் புதுச்சேரி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு அளித்து வரும் நிதி அளவில் 75 சதமான நிதியை புதுவை பல்கலைகழகத்துக்கு மட்டும் நிதி உதவியாக அளித்து வருகிறது. உண்மை இவ்வாறு இருக்க, புதுவைப் பல்கலைக்கழகமோ நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லத்திற்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கவும், நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும், சொகுசு கார்கள் வாங்குவதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது. இந்த வீண் செலவுகளை கடைசியில் கல்வி கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மதிப்பெண் சான்றிதழ் கட்டண உயர்வு, விடுதி கட்டண உயர்வு என மாணவர்கள் தலையில் திணிக்கும் ஒரு எதேச்சதிகார மனநிலையில் புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் செயல்பட்டு வருவதை இந்திய மாணவர் சங்க புதுச்சேரி பிரதேச குழு வன்மையாக கண்டிக்கிறது. இவர்கள் பயணிக்க சொகுசு கார்களை வாங்குவதை விட்டுவிட்டு அந்த பணத்தில் இலவச பேருந்து சேவையை தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.
மத்திய அரசு அளிக்கும் குறைவான நிதியில் சுமார் 15 லட்சம் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் புதுவை அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. ஆனால் சொகுசு கார்களை வாங்கி ஆடம்பர பவனி வரும் துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும் புதுச்சேரி அரசிடம் 1 ரூபாய் மாணவர் சிறப்பு பேருந்தை பல்கலைக்கழகத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது என்பது வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது போல் இருக்கிறது. புதுச்சேரி அரசிடம் இலவச பேருந்து கோரிக்கையை வைத்துள்ள புதுவை பல்கலைகழகத்துக்கு புதுவை அரசு மற்றும் முதலமைச்சர் அவர்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டில் உயர்த்தப்பட்ட அநியாய கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு நம்புகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.