
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை கடந்த மாதங்களில் அதிதீவிரமாக இருந்துவந்தது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்மூலம், கரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் கரோனா தடுப்பூசி அறிமுகம் செய்தபோது மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் குழப்பமும் நிலவியது. அதன்பிறகு தொடர்ந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வப்போது தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுவருகிறது.
ஒருபுறம் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவிவரும் சூழ்நிலையில், சில இடங்களில் மக்கள் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சுகின்றனர். சமீபத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராத காரணத்தால், மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்தனர். ஆனால், மருத்துவக் குழுவினரின் வருகையைக் கண்டு அக்கிராம மக்களும் இளைஞர்களும் மரத்தின் மீது ஏறியும், தோடங்களினுள் ஓடியும் மறைந்தனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தமானிகோம்பை, வரதகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதிகளில் அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள கோவில் முன்பாகவும், போலீஸ் நிலையங்களிலும் ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தண்டோரா மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.