“சார் எங்க ஊரில் தினமும் திருட்டு சம்பவங்கள் நடக்குது” என கிராம மக்கள் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளிக்கும் அதே நேரத்தில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ளது பிரதாபராமபுரம் கிராமம். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டுச் சம்பவங்களும் வழிப்பறிச் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும், இத்தகைய திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்படும் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாகை மாவட்ட எஸ்.பி. ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, கிராம மக்களின் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி நேரடியாக பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், கிராமத்தின் முக்கியப் பகுதிகளில் கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென உத்தரவிட்டார். இது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், மாவட்ட எஸ்.பி நேரில் வந்து மக்களை சந்தித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் பூவைத்தேடி பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையறிந்த பொதுமக்கள் போலீசார் இருக்கும்போதே திருட்டு நடக்கிறதே என்று அச்சமடைந்தனர். இந்நிலையில், காவல்துறையை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து எஸ்.பியிடம் புகார் தெரிவித்த பொதுமக்கள் பேசும்போது, "சாராயத்தையும் கஞ்சாவையும் ஒழித்தாலே போதும். திருட்டுச் சம்பவங்களும், வழிப்பறிகளும் நிச்சயமாக குறைந்துவிடும். மேலும், காவல் நிலையம் சென்று புகார் அளித்தால் கூட போலீசார் அலட்சியமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் இருக்கும்போதே நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் வேளாங்கண்ணி பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை காண முடிகிறது.