அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்திற்கு அருகே கரைவெட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் 1999 க்குப் பிறகு கரைவெட்டி ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை மீன் பிடிக்கும் உரிமையை கிராம மக்களில் ஒருவருக்கு ஏலம் விட்டு கரைவெட்டி ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கரைவெட்டி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்த உடன் மீன்வளத்துறை வெளியேறியது. பின்னர் 1,100 ஏக்கர் 11 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. கரைவெட்டி ஏரியில் வருடந்தோறும் ஏரியில் மக்கள் தண்ணீர் குறையும்போது மீன் பிடிப்பது நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு மீன்பிடித் திருவிழாவை கிராம மக்கள் நடத்தினர். கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழாவை ஆண்டுதோறும் ஒரு நாள் நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
அதற்கு ஏரியில் பறவைகளுக்கு மட்டுமே மீன் என கூறி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். பின்னர் தண்ணீர் குறைந்தவுடன் மீன்கள் ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும்போது செத்து மிதக்க ஆரம்பித்து நாற்றமடிக்க ஆரம்பித்தவுடன் வீணாகப் போகின்ற மீனை நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் என்ற சுற்று வட்டார கிராம மக்கள், ஒன்று திரண்டு ஏரியில் இறங்கி மீன்பிடித்து வந்தனர். இந்த ஆண்டும் ஜூலை மாதம் தண்ணீர் வற்றி ஏரியில் மீன்கள் செத்து நாற்றமடிக்கத் துவங்கியது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஏரியில் உள்ள தண்ணீர் முழுக்க வற்றிவிட உள்ளதால் சனிக்கிழமை காலை கரைவெட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஏரியில் இறங்கி மீன்பிடித் திருவிழாவை நடத்தினர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வெங்கனூர் காவல்நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஊரடங்கு நேரத்தில் பலர் ஒன்றுகூட கூடாது என மீன்பிடித் திருவிழாவில் ஈடுபட்ட கிராம மக்களை கலைந்து போகச் செய்தனர். கரோனாவை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் வீணாகப் போகின்ற மீனைப் பிடிப்பதிலேயே கிராம மக்கள் கவனமாக இருந்தனர்.