திருவண்ணாமலை நகரத்தில் திருவண்ணாமலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் வேங்கிக்கால் பகுதியில் மாவட்ட மின்வாரிய அலுவலகம் உள்ளது. எதிரே நகர மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த இரண்டு பகுதியும் 15 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் பரந்துவிரிந்துள்ளது.
இதில் 100, 150 ஆண்டுகளை கடந்த மரங்கள் உட்பட நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இதில் பழைமையான மகிழமரம் உட்பட பல மரங்களை திடீரென உயர் அதிகாரி ஒருவர் வெட்ட உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன.
இதுப்பற்றி அவ்வலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் நம்மிடம், இந்த மரங்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. இங்கு பணியாற்றும் எங்களுக்கும், இங்கு வேலையாக வரும் மக்களுக்கும் நல்ல குளிச்சியை தந்துவந்தது. இங்கு கட்டிடங்கள் கட்டி விஸ்தரிக்க வேண்டும் எனச்சொல்லி மரங்களை வெட்ட உத்தரவிட்டுவிட்டார் அந்த உயரதிகாரி. அவர் அதிகாரியாக செயல்படாமல் தான்தோன்றிதனமாக செயல்படுகிறார், அவரை சுற்றி சிலர் உள்ளனர், அவர்கள் சொல்வதை மட்டும்மே செய்வார். தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாராவது அவரிடம் முறையிட்டாலும் கேட்பதில்லை. மரங்களை வெட்டாமல் கட்டிடங்கள் கட்ட நிறைய இடங்கள் வளாகத்திலேயே உள்ளன. இவர்களின் சோம்பேறி தனத்துக்கு மரங்களை பலிக்கொடுத்துவிட்டார்கள் என்றார் வேதனையான குரலில்.
நகரத்தில் ஏற்கனவே மரங்கள் வளர்ப்பது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. இருக்கும் மரங்களையும் மின்கம்பியில் உராய்கிறது என வெட்டுவதும், வெட்டச்சொல்லி மக்களை மிரட்டுகின்றனர் மின்வாரியத்தினர். இந்நிலையில் தங்கள் வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது நியாயமற்ற செயல் என கொதிக்கின்றனர் பசுமை ஆர்வலர்கள்.