கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ரூபி மனோகரன். பரபரப்பான தேர்தலில் 61,991 வாக்குகள் பெற்று 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இல்லை மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக வேகமாக வாக்குகளை எண்ணி முடித்துவிடலாம். ஆயினும் பல குறைபாடுகள் உள்ளன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒரு இடத்திலிருந்தபடி குறிப்பிட்ட சின்னத்தில் பெரும்பாலான வாக்குகள் பதிவாக வேண்டும், என்று செட்டிங் செய்து ஏன் இயக்க முடியாது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தங்கள் விருப்பம் போன்று பயன்படுத்தும் வகையில் அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. எனவே மீண்டும் முன்பு போன்று வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தொழில் நுட்பமுள்ள உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட வாக்குச் சீட்டைப் பயன்படுத்தியே தற்போது வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தியாவிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், அவரின் இந்த வலியுறுத்தல் அறிக்கையை, அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்கும் அனுப்பியுள்ளதாக ரூபி மனோகரின் உதவியாளர் ராஜா தெரிவித்தார்.