‘ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை. நிர்மலாதேவி குறித்த செய்திகள் நக்கீரனில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. நக்கீரனில் நிர்மலாதேவி குறித்த செய்தி வெளியிடத் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கான இடைக்காலத்தடையை நீக்கி விரைந்து முடிக்க வேண்டும்.’ என்று தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்ய, ‘வரும் 22-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் அறையில் நிர்மலாதேவி ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்.’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில், செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன். அப்போது, நிர்மலாதேவியும் அவருடன் இருந்தார்.
வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனின் பேட்டி இதோ -
"நிர்மலாதேவி வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் பெயரை நான் சொல்லியிருக்கலாம். ஆனா, ‘இவரு நிர்மலாதேவி வழக்குக்குப் போனாரு... இவரோட அரசியல் லாபத்துக்காச்க சொல்றாரு’ன்னு சொல்வாங்க. நான் அதை விரும்பல. அதனாலதான், மதுரை பாராளுமன்ற தொகுதியில் அதிமமுக வேட்பாளராகப் போட்டியிடும் நான், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த போதும், ஒரு இடத்தில் கூட நிர்மலாதேவி பெயரை பயன்படுத்தல. நான் நினைத்திருந்தால் நிர்மலாதேவியைப் பிரச்சாரத்துக்கே கூப்பிட்டிருக்கலாம். ஊடகங்களுக்குதான் பேட்டி கொடுக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனாலும், அது வேணாம்னு நான் பண்ணல. நிர்மலாதேவி, தனக்கு ஏற்பட்ட நிலைமையை சொன்னார். இடையிலே ஜாமீன் கிடைத்தபோது நேரில் வந்து நன்றி சொன்னார். அதன் பிறகு நேற்று என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் இப்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவரை ஏன் போலீஸ் தேடுகிறது? அவங்க என்ன தேடப்படும் கொலைக் குற்றவாளியா? பொள்ளாச்சியில பாலியல் கொடுமை நடந்ததே? அதுக்கு யாரை கைது செய்தாங்க? துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் மேலேயே புகார் இருக்கே... அதையெல்லாம் விட்டுட்டு தொடர்ந்து நிர்மலா தேவியை தொந்தரவு செய்தால், அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. மர்மத்தை அவுங்கதான் சொல்லணும்... கவர்னர் மாளிகையும் தலைமைச் செயலகமும் அவங்கள காப்பாத்த துடிக்கிற சிபிசிஐடியும் தமிழக அரசும்தான் சொல்லணும். நிச்சயமாக யாரும் தப்பிக்க முடியாது. இதில் இருக்கக்கூடியவர்கள், நிர்மலாதேவிக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் சட்டத்தின் முன்னாடி தப்பிக்க முடியாது.” என்று சொன்னபோது, ‘நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?’ என்று இடைமறித்தோம்.
“இதுக்கு எப்படி ஆதாரம் எடுக்க முடியும்? அது போக, அவுங்க உறவினர்களெல்லாம் அரசு வேலைகள்ல இருக்கக்கூடியவங்க, ரொம்ப சாதாரணமானவங்க. இப்போ நான் ஒரு வழக்கறிஞர், நான் பேசலாம். அவுங்க எப்படி கவர்னர் மாளிகை மேல புகார் கொடுக்க முடியும்? புகார் கொடுத்தா நீ உயிரோட இருக்க மாட்டன்னு போலீஸ் சொல்லும். இப்போ அவங்கள கூட்டிட்டுப்போயி விசாரிச்சதுக்கே எந்த ரெக்கார்டும் இல்லையே? இப்ப, ஜாமீன் கிடைச்சு பத்து நாள் ஆச்சு அவுங்க வெளிய வர்றதுக்கு? உறவினர் வரக்கூடாது, உறவினர் கையெழுத்து போடக்கூடாது உறவினர் அழைத்துச் செல்லக்கூடாதுன்னு எந்த அளவுக்கு போலீஸ் மிரட்டுச்சு? யாராவது அவுங்க உறவினர் வந்தாங்களா அவங்க சிறையிலே இருந்து வரும்போது? இப்பயும் அவுங்க உறவினர் யாரும் சந்திக்கல. அவுங்க சிறையில இருந்தப்ப ஏற்பட்ட உடல் காயங்கள், உள்காயங்களுக்காக தனியா இருந்ததாக, பெங்களுருவில் இருந்ததாகச் சொன்னார் என்கிட்ட. அங்க இருக்கும்போது சிகிச்சை பெற்று இருக்காங்க. ஏன் அவங்கள தொடரணும், இந்த காவல்துறையும் கவர்னர் மாளிகையும் தமிழக அரசும்? ஏன் பயப்படுறாங்க, அச்சப்படுறாங்க? மடியில கனமில்ல வழியில பயமில்லைன்னு இருக்க வேண்டியதுதானே? ஏன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்துடுவாங்கன்னு அச்சப்படுறாங்க? தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தா இந்த ஆட்சியாளர்கள் தோத்துருவாங்களா? பசும்பொன் பாண்டியன் கேட்ட கேள்விக்கே இங்க இருக்குற லோக்கல் அமைச்சர்களால பதில் சொல்ல முடியல. நிர்மலாதேவி என்கிட்ட சொன்ன விஷயத்தை என் அரசியல் அற்ப லாபத்துக்காக பயன்படுத்த விரும்பல. ஆனா, நிச்சயம் ஒரு நாள் அவுங்களே பேட்டி கொடுப்பாங்க. 22ஆம் தேதி, நீதியரசரிடம் அனுமதி பெற்ற பிறகு ஊடகவியலாளர்களை எல்லாம் அழைப்பேன். அப்போது சொல்வாங்க. நிச்சயமாக இந்த வழக்கின் உண்மைத்தன்மையையும் பின்னணியையும் ஊடகவியலாளர்கள்கிட்ட சொல்வாங்க. ” என்றபோது, ‘நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்லப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் அந்த ஆபத்து இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு,
“ஆமா... ஆமா...இருக்கு. அதுனாலதான், அவுங்களுக்குள்ள பிரச்சனையே இல்லாதப்ப அவுங்க கணவரையே கூப்பிட்டு 'நீ சிறைக்கு சென்று பார்க்கவே கூடாது... நீ விவாகரத்து பண்ணிடு' என்று கண்டிஷன் போட்டது சிபிசிஐடி. பிள்ளைகள் சந்திக்கக்கூடாது, உறவினர்கள் சந்திக்கக்கூடாதுன்னு சிபிசிஐடி கட்டுப்பாடு. இப்போ இவுங்க வெளிய வந்துட்டதால இவுங்க போய் அவுங்கள பாத்துடுவாங்க என்பதால அவுங்கள மிரட்டுறாங்க. 'நீ விவாகரத்து நோட்டீஸ் குடுத்துரு'ன்னு மிரட்டுறாங்க. இப்போ 22ஆம் தேதி அருப்புக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்னு இவுங்க கணவர் விவாகரத்து நோட்டிஸ் விட்டிருக்காரு. இங்கயும் (மதுரை உயர் நீதிமன்றத்தில்) இவுங்க அதே தேதியில் ஆஜராகணும். எப்படி நெருக்கடி கொடுக்குறாங்க பாருங்க. இதைச் செய்யுறது அரசுத் தரப்பு. ஏதாவது ஒரு பக்கம் ஆஜராகலைன்னா வாரண்டு போட்டு நிர்மலாதேவியை உள்ள வைக்கிறதுன்னு திட்டம் இருக்கோ என்னவோ?” என்று அவர் கூறியபோது ‘ஜாமீனில் வெளிவந்த பிறகு ஏதாவது மிரட்டல் இருக்கிறதா?’ என்று கேட்டோம்.
“இருக்குது... கணவரை மிரட்டுறாங்க, உறவினரை மிரட்டுறாங்க. 'ஏன் ஜாமீன் கொடுத்த'னு இவுங்க அண்ணனை மிரட்டுறாங்க. 'நீ இருந்துருவியா இங்க?னு மிரட்டுறாங்க. அவரு வெளியூர் போயிட்டாரு. அவரு வந்தார், ஜாமீன் கொடுத்து வேலை முடிஞ்சதும் போயிட்டாரு. அவுங்க போலீசாருக்கு பயந்து போன் நம்பரை மாத்திக்கிட்டே இருக்காங்க. பெண்களைப் போய் மிரட்டுறாங்க, நடுராத்திரியில் போய் மிரட்டுறாங்க. அதுக்கு இது ஒரு உதாரணம் ” என்றவர், நிர்மலாதேவியின் கணவர் அனுப்பிய விவகாரத்து நோட்டீஸைக் காட்டினார்.
‘நிர்மலா தேவியை நேரடியாக மிரட்டுனாங்களா?’ என்று நாம் கேட்டபோது,
“நிர்மலா தேவியை பார்க்க முடியல. அவுங்க போன் நம்பர் இல்ல. அவுங்க இருக்குற இடம் அவுங்க உறவினர்களுக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஒரே ஒரு முறைதான் சந்தித்தேன் ஜாமீனுக்குப் பின்னாடி. ” என்று சொல்ல, ‘அப்படின்னா.. தலைமறைவா இருக்காங்களா?’ என்று கேட்டோம்.
“தலைமறைவா இல்லை. உயிருக்கு அச்சப்பட்டு இருக்காங்க. யாரால் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் இருக்காங்க. ” என்று நிர்மலாதேவியின் மிரட்சியைச் சொல்ல, ’22ஆம் தேதி கோர்ட்ல ஜட்ஜ் கிட்ட அனைத்து விசயங்களையும்...?’ என்று கேள்வி எழ,
“ஆமா... எல்லாத்தையும் சொல்லப் போறாங்க. ஊடகங்களிடம் பேச அனுமதியும் கேக்கப் போறாங்க. அவுங்களே கேக்கலாம்.எல்லா விசயத்தையும் இரண்டு நீதியரசர்கள் கேக்க இருக்காங்க. நீதிமன்றம் நல்ல முடிவா குடுப்பாங்க. ஏன் இவ்வளவு வேகமா இந்த வழக்க நடத்த நினைக்குறாங்க? அரசு தரப்புல ஏன் திடீர்னு நேத்து இந்த வழக்க அவசர வழக்கா எடுக்கணும்னு சொல்றாங்க? ஏன்னா, தேர்தலு. தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிஞ்சுருச்சானு தெரியல. கவர்னர் நல்லவர்னு சொல்லி விடை கொடுக்கப் பாக்குறாங்க. ” என்றவர், “அன்றைக்கு மதுரை உயர் நீதிமன்றத்துக்கு ஏஏஜியுடன் (தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன்) கவர்னர் மாளிகையிலிருந்து ஒருவர் சேர்ந்து வந்ததாக எனக்கு தகவல் வந்தது.” என்று தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.
பசும்பொன் பாண்டியன் பேட்டியளித்தபோது, பக்கத்தில் இருந்து கூர்ந்து கவனித்த நிர்மலாதேவியின் முகத்தில் அப்பட்டமாக மிரட்சி வெளிப்பட்டது.