இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரைக் கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் மற்றும் வேலூர் ராஜகுப்பம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது வாங்குவதைத் தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு ஆசிரியர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆர். கோபிநாத் மற்றும் மதுரை மாவட்டம், லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் ஆர்.எஸ். முரளிதரனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மதிப்புமிக்க விருது, கல்வி மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளுக்கான உங்களின் சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரித்து, கற்பித்தல் மற்றும் மாணவர் மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்கான உயர் தரத்தையும் குறிப்பதாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.