சர்வதேச பழங்குடியினர் தினம்: ஈரோட்டில் கருத்தரங்கம்
ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் சர்வதேச பழங்குடியினர் தின கருத்தரங்கம் இன்று நடத்தப்பட்டது.
சுடா் அமைப்பின் சார்பில் ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் சர்வதேச பழங்குடியினர் தின கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர் திலகா் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் வி.பி.குணசேகரன் பேசியபோது, ‘சர்வதேச அளவில் பல இனக்குழுக்கள், பல சமூகங்கள் இருந்தபோதிலும், பழங்குடிகளுக்கு மட்டும் தான் இப்படி ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் உயரிய பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள். குறிப்பாக, சாதிகள் மற்றும் மதங்கள் அற்றவர்கள். இவ்வாறே, வர்க்க வேறுபாடுகளற்றவர்களாகவும், பாலின சமத்துவத்தை பேணிப்பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர். அதேபோல இயற்கையை சிதைக்காமல், வனத்தையும், வனவிலங்குகளையும் நேசித்து, இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள் தான் இந்த பழங்குடி மக்கள். இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம். மாணவ, மாணவியர் பழங்குடியினரது வரலாற்றை பயிலவேண்டும், ஆவணப்படுத்திடவேண்டும்’ என்றார்.
இந்த கருத்தரங்கில் சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ், பழங்குடியினர் ஆய்வு மாணவர் சத்தியமூா்த்தி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் சு.மோகன்குமார், மாநில பொருளாளர் கடம்பூர் ராமசாமி, மாவட்ட செயலாளா் ஜீவபாரதி, அறிவியல் ஆசிரியர் திருநிறைச்செல்வன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் என பலர் பங்கேற்றனர்.
- சி.ஜீவா பாரதி