Skip to main content

கரோனா உடலை வைத்து பணம் பறிப்பு! - தனியார் ஆம்புலன்ஸ்களோடு மருத்துவ ஊழியர்கள் கூட்டணி?

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Medical staff alliance with private ambulances?

 

‘விருதுநகர் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் வாடகைக் கொள்ளை. விருதுநகரிலிருந்து பெங்களூருவுக்கு ரூ. 55,000. இந்த பொழப்புக்கு?’ என, இந்த ஊரடங்கின்போது கரோனா தொற்றில் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்வதற்கு அநியாயக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று, ஒரு குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, வாட்ஸ்ஆப்பில் கன்னாபின்னாவென்று கருத்துகள் பகிரப்பட, விவகாரம் விருதுநகர் மேற்கு காவல் நிலையம் வரை சென்றுள்ளது.   

 

‘கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினரிடம் ஆறுதலாக நடந்துகொள்ள வேண்டிய தருணத்தில், பிணத்தையும் சூழலையும் வைத்து தடாலடியாகப் பணம் பறிப்பது கொடுமையல்லவா?’ என்ற ஆதங்கம் விருதுநகர் வட்டாரத்தில் பரவிக்கிடக்க, களமிறங்கினோம்.

 

விருதுநகரில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்துபவர்களில், எஸ்.கே. ஆம்புலன்ஸ்தான் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. “கரோனா உடலை வைத்து பத்து மடங்கு வாடகை வசூலிக்கிறார்கள். இந்த அக்கிரம வசூலுக்கு வவுச்சரோ, ரசீதோ தருவதே இல்லை. ட்ரிபிள் வி கல்லூரி அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து மயானத்துக்குச் செல்லும் தூரம் 2 கி.மீ. மட்டுமே. இவர்கள் வசூலிப்பது ரூ. 8,500. இதற்கான கணக்கை, வாகனத்துக்கு ரூ. 3,500 + ட்ரெஸ்ஸிங் ரூ. 3,000 + டிரைவர் படி ரூ. 2,000 எனப் பிரித்துச் சொல்கின்றனர். விருதுநகரிலிருந்து மதுரைக்கு எடுத்துச் செல்வதற்கு கட்டணம் ரூ. 13,000 என்றும், பெங்களூரு வரை கொண்டு செல்வதற்கு ரூ. 55,000 என்றும் ரேட் வைத்துள்ளனர். உடலை ஏற்றும்போது, ‘மொதல்ல ஏறுங்க.. பார்த்துக்கலாம்..’ எனச் சொல்லிவிட்டு, உடலை இறக்கும்போதுதான், அநியாய கட்டண விபரத்தைக் கூறி, உயிரைப் பறிகொடுத்தவரது குடும்பத்தின் தலையில் இடியை இறக்குகிறார்கள். 

 

இந்த எஸ்.கே. ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தினர், மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதிலும் கல்லா கட்டுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு நேரத்தில், ரூ. 1,500 பெறுமான ஆக்சிஜன் ரெகுலேட்டர் கிட்டை,  மதுரையில் மெடிக்கல்ஸ் வட்டாரத்திலிருந்து ரூ. 2,400க்கு வாங்கி, இங்கே விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு ப்ளாக்கில் ரூ. 10,000க்கு விற்கின்றனர். திருமங்கலம் அருகே ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்திடம் ரூ. 300க்கு நிரப்பி, விருதுநகரில் ரூ. 3,000க்கு சப்ளை செய்கின்றனர். இந்தக் கொள்ளைக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்து, கமிஷன் பெற்றுவருகின்றனர்” எனக் குமுறலாகச் சொன்னார், நோயாளிகளின் உறவினர் தரப்பிலிருந்து ஒருவர். 

 

எஸ்.கே. ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தும் பகதுர் உசைனிடம் பேசினோம். “சிலர் எங்களைப் பற்றி இல்லாததை, பொல்லாததைச் சொல்கிறார்கள். மருத்துவமனை ஊழியர்களிடம் கூட்டு வைத்து எப்படி செயல்பட முடியும்? தொழில் போட்டியில் குறை சொல்கிறார்கள். இறந்தவரது உறவினர்கள் அவசரத்தில் பில் கேட்க மாட்டார்கள். கேட்டால் கொடுப்போம். 500 ரூபாய் வேண்டுமானால் கூடுதலாக வாங்குவோம். பெங்களூரு ட்ரிப்புக்கு வாடகை அதிகமாக வசூலித்தோம் என்று ஏன் சொல்கிறார்களென்றால், 11 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் உடன் எடுத்துச் சென்றோம். பொதுவெளியில் எங்களைக் கேவலப்படுத்தி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போட்டதால், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தோம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கண்டித்து அனுப்பிவிட்டார்கள்” என்று கட்டணக் கொள்ளை நடக்கவே இல்லை என மறுத்துப் பேசினார். 

 

விருதுநகரில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதுமே ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்ளை குறித்த கோபதாபங்கள் வெளிப்படுகின்றன. தமிழக அரசு, தனியார் ஆம்புலன்ஸ் விஷயத்திலும் கவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்