ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளை பாதித்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியா வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து, அங்குள்ள விளைநிலங்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் முழித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்திலும் இந்த வெட்டுக்கிளிகள் வருமா என விவசாயிகள் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி கிராமத்தில் சில இடங்களில் செடிகளில் கூட்டம், கூட்டமாக வெட்டுக்கிளிகள் அமர்ந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்து இது தொடர்பான புகைப்படங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்த வெட்டுக்கிளிகள் பற்றி கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக நாளை ஆராய்ச்சி செய்து முடிவுகள் எடுக்கப்படும், அவை சாதாரண வெட்டுக்கிளிகளா அல்லது வடமாநிலத்திலிருந்து வந்தவையா என அதன்பின் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.