Skip to main content

கோயிலில் புரோக்கரிடம் ஆலோசனை கேட்ட வடக்கு மண்டல ஐ.ஜி!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் வெடித்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக இருந்த மகிழேந்தி, கோயிலுக்குள் ஆய்வு நடத்தினார்.

 

karthigai-deepam-festival-police issue

 

 

அப்போது கோயில் சார்பில் நகர காவல்நிலையத்தில் கோயிலுக்குள் சுற்றி திரியும் புரோக்கர்கள் குறித்து 15 பேர் கொண்ட பட்டியல் இணைத்து புகார் தரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்தது காவல்துறை. மற்றவர்களை தேடி வருவதாக சொன்னது காவல்துறை. அந்த புரோக்கர்கள் பின்னர் நீதிமன்றம் சென்று முன்ஜாமீன் பெற்றனர் எனக்கூறப்பட்டது. அந்த வழக்கை அப்படியே நீர்த்து போக வைத்துவிட்டனர் போலீஸார்.  

இந்நிலையில் டிசம்பர் 10ந்தேதி மாலை மகாதீபத்தன்று, கோயில் சார்பில் புரோக்கர் என புகார் தரப்பட்ட மூன்று பேர் கோயிலுக்குள், கோயில் பணியாளர்கள் என்கிற அட்டை பாஸ் வைத்துக்கொண்டு உள்ளே வந்திருந்தனர். அதில் இருவர் சாமி தூக்கிக்கொண்டு இருந்தனர். ஒருவர் மைக் கையில் வைத்துக்கொண்டு கூட்டத்தை சரிப்படுத்திக்கொண்டும், காவல்துறைக்கு ஒத்தொழைப்பு தரவேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துக்கொண்டு இருந்தார்.

வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜ் தலைமையில் கோயில் பிரகாரத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அப்போது, கொடிமரம் முன்பு நின்றுயிருந்த கோயில் சார்பில் புரோக்கர் எனச்சொல்லி புகார் தரப்பட்ட மிக முக்கிய புரோக்கர் ஒருவரிடம், ஐ.ஜீ ஆலோசனை கேட்க, சாமி எப்படி வரும், என்ன செய்ய வேண்டும் எனச்சொன்னார். அவர் சொன்னதை கேட்டு அதற்கு தகுந்தார் போல் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தினார் ஐ.ஜி. இதனைப்பார்த்த உள்ளுர் பக்தர் ஒருவர், நம்மிடம் கோயிலில் எத்தனையோ பணியாளர்கள் உள்ளார்கள், அதிகாரிகள் உள்ளார்கள், விவரம் அறிந்த காவல்துறையினர் உள்ளார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டுயிருக்கலாம், புரோக்கர் ஒருவரிடம் உயர் அதிகாரி ஆலோசனை கேட்பது சரியா என அதிர்ச்சியோடு புலம்பினார்.

தீபம் ஏற்றி முடிந்தவரை அந்த புரோக்கரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அவர் தமிழகத்தில் ஓரளவு பிரபலமானவர்களை சந்தித்து, தன்னால் அண்ணாமலையார் கோயிலுக்குள் உங்களுக்கு தேவையானது செய்து தர முடியும் எனச்சொல்லி அவர்களை இங்கு அழைத்து வருகிறார். அப்படி அழைத்து வரும்போது, இங்குள்ள சிவாச்சாரியர்கள், அதிகாரிகளை பணத்தால் குளிப்பாட்டுகிறார். கோயில் இணை ஆணையர் ஞானசேகரே, அந்த புரோக்கர் சொல்வதற்கு மறுப்பேச்சு பேசாமல் தலையாட்டுகிறார். அவரே பவ்யமாக தலையாட்டும்போது, மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள், அதனால் தான் கோயிலில் இவ்வளவு செல்வாக்கு என்கிறார் கோயிலில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.
 

சார்ந்த செய்திகள்