தேமுதிக கொடி அறிமுக நாள் இன்று (12.02.2021) தேமுதிகவினரால் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார வேனில் ஏறி, கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கையசைத்தார். அதன்பின் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ''கூட்டணி பற்றி தேமுதிகவிடம் கேட்காதீர்கள், அதிமுகவிடம் கேளுங்கள். கூட்டணியில் குழப்பமோ, பிரச்சனையோ இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இனி தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொள்வர்'' என்றார்.
இதற்கு முன்பே சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ''இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்து அதிமுக காலதாமதம் செய்யாமல் விரைவாக பேச வேண்டும்'' என்று கூறியிருந்தார். அதேபோல் அண்மையில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் ''பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தேமுதிக தனித்து நின்றால் கூட 234 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கிறார்கள்'' எனவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.