சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. இதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு குழுக்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள்,தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய புஸ்ஸி ஆனந்த்,''வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. அதில் 'நிரந்தர பொதுச்செயலாளர்' என்று போட்டு இருந்தார்கள். விஜய் எனக்கு பொதுச்செயலாளர் பதவி தான் கொடுத்திருக்கிறார். அது நிரந்தரமா இல்லையா என்பதை முடிவு செய்வது விஜய் தான். கடைசி காலம் வரை அவருடன் இருப்பேன். 15 வருடத்திற்கு 20 வருடத்திற்கு முன்பே 'சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி ஐந்து வருடத்திற்கு வரும் போகும். விஜய்யின் ரசிகர் என்ற பதவி கடைசி காலம் வரை இருக்கும்' என்று சொன்னேன். விஜய் ரசிகன் என்ற பதவிதான் என்னை இந்த இடத்தில் நிறுத்தியுள்ளது. அதனால் தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது ஒரு முகவரிதான். இந்த கல்யாண மண்டபத்திற்கு ஒரு பெயர் இருக்கிறதோ, ஒரு தெருவுக்கு பெயர் இருக்கிறதோ, அதுபோல பொதுச்செயலாளர் என்பது பெயர்தான். எப்பொழுதும் நாம் எல்லோரும் விஜய்யின் தொண்டனாக, தோழனாக, கடைசி காலம் வரைக்கும் நாம் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.