மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் நூலினை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்கு, தமிழக இலக்கிய அமைப்புகள் கண்டனக் குரல்கள் கொடுத்துள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் இரா.காமராசு நம்மிடம், "புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியுள்ள ‘வாக்கிங் வித் காம்ரேட்ஸ்’ என்ற நூல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.சார்பில் உள்ள காவிக் கூட்டத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அதை நீக்கக் கோரியது.
அந்த நூல் கருத்துரைக்கும் பொருள், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதை எதிர்த்து மலைவாழ் மக்கள் போராடுவதை எடுத்துரைக்கும் நூல். இது கார்ப்பரேட் ஆதரவு மத்திய அரசுக்குக் கசக்கும் என்பதை அறிவோம். அதற்கு அடிபணியும் வகையில் தமிழ்நாடு அரசு இத்தகைய முடிவின் பின்னால் உள்ளதையும் மறுக்க முடியாது.
பாடத்திட்டம், கற்பித்தல் போன்ற கல்விசார் செயல்பாடுகளில் மதம் சார்ந்த அரசியல் ரீதியான உள் நோக்கக் கற்பிதங்கள் வழி அழுத்தம் தருவது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் உயரிய கருத்தை வலியுறுத்தும் அருந்ததிராய் எழுதிய நூலினைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மனோன்மணியம் பல்கலைக்கழகம் அந்த நூலை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு கூறியுள்ளார்.