அண்மையாகவே சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் நடமாடும் மாடுகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அவ்வப்போது ஆய்வுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில் முதியவர் ஒருவரை கிர் ரக காளை ஒன்று முட்டித் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 17 மாடுகள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் சென்னை ஆவடி அருகே நிகழ்ந்துள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் நேற்று மதியம் குடியிருப்புப் பகுதியில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக அவரை முட்டியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.