திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன் ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.