வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரு நகரங்களில் கனமழையின் காரணமாகத் தண்ணீர் தேங்காமல் மழைநீர் வடிகால்களைச் சீரமைக்கும் பணிகள் ஒரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழை பெய்யும் பொழுது மழைநீர் தேங்குவது இயல்பு. மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்துவிடும். அடுத்தடுத்து கனமழை வரும் எனச் சொல்லுகிறார்கள். அதை எதிர்பார்த்துத்தான் பணிகளைச் செய்து வருகிறோம். எந்த ஆபத்தும் நேராது. அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இன்று இரவு சீர்காழி, மயிலாடுதுறை ,கடலூர் போன்ற இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறேன்” எனக் கூறினார்
அதே வேளையில் மழையின் பாதிப்பால் நேற்று (12.11.22) மட்டும் 83 கால்நடைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. அன்று ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் 538 வீடுகள் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 25 வீடுகள் சேதமடைந்ததுள்ளது. இது மட்டுமல்லாமல் 8 மாடுகள் உள்ளிட்ட 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.