சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும். தென்காசி மாவட்டத்திலும் நாளை மிக கனமழை பெய்யலாம். சேலம், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவானது. தக்கலை, சுருளகோடு, தலா 13 செ.மீ., பெருஞ்சாணி அணை 12 செ.மீ., இரணியல் நாகர்கோயில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
கனமழை, வெள்ளம் காரணமாக கன்னியாகுமரிக்கு இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
இதனிடையே, மழைநீர் தேங்கியதால் கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையே ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.