தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், வரும் நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 'கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை கோவை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செப்.1 ஆம் தேதி தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.