நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களை பிடித்து முதல்வர் எடப்பாடி அரசு நூலிலையில் தப்பியுள்ளது. தற்போது எதிர்கட்சியான தி.மு.க. கூட்டணியின் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் 110 உள்ளார்கள். டி.டி.வி.தினகரன் உட்பட அவரது அணியில் உள்ள மூவருடன் சேர்த்து நான்கு எம்.எல்.ஏ.க்கள் அடுத்து இரட்டை இலையில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் தனியரசு, கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சி என மூன்று பேர் ஆக இந்த 7 பேர் என கணக்கிட்டால் சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் உட்பட அ.தி.மு.க. பலம் 117 மொத்த பெரும்பான்மைக்கு 118 பேர் தேவை. இதில் எம்.எல்.ஏ. தனியரசு அ.தி.மு.க. பக்கமே இருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கீட்டின்படி 118 என்ற பெரும்பான்மை அ.தி.மு.க.வுக்கு உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி ஆட்சியை காப்பாற்றக்கூடிய ஒவ்வொரு ஒட்டுக்கள் இதில் ஒரு எம்.எல்.ஏ.மிஸ்சானாலும் எடப்பாடி அரசு சட்டப்படி கவிழும் என்பது வெளிப்படையானது.
இந்த நிலையில் ஏற்கனவே கட்சிக்குள் அமைச்சர் கருப்பணனுக்கு எதிராக போர் குரல் கொடுத்து வருபவர் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாஜலம். இவர்தான் இப்போது ஒட்டுமொத்த அ.தி.மு.க.வின் "டிமான்ட்" எம்.எல்.ஏ.வாக மாறியுள்ளார்.
நடந்து முடிந்து முடிவு வந்துள்ள திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் தான் அமைச்சர் கருப்பனின் பவானி, அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம், எம்.எல்.ஏ.தோப்புவின் பெருந்துறை ஆகியவை அடங்குகிறது இதில் கருப்பணனின் பவானி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வைவிட கம்யூனிஸ்ட் கட்சி 18 ஆயிரம் வாக்குகள் அதிகம், செங்கோட்டையளின் கோபி தொகுதியில் அ.தி.மு.க.வை விட கம்யூனிஸ்ட் 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது ஆனால் இதே தோப்புவின் பெருந்துறையில் அ.தி.மு.க.வை விட கம்யூனிஸ்ட் வெறும் 4 ஆயிரம் வாக்குகள் தான் அதிகம் ஆக இரு அமைச்சர்கள் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வாக்கு பலத்தை இழந்துள்ளது.
இது எம்.எல்.ஏ. தோப்பு வை உற்சாகமாக்கியுள்ளது. இதுபற்றி நாம் தோப்பு வெங்கடாஜலத்திடம் பேசினோம் " அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் இவர்கள் செய்யவில்லை. இவர்களால் கட்சி பலவீனப்பட்டுள்ளது. எனது தொகுதியில் கட்சிக்கு உண்மையாக உழைத்து செல்வாக்கான வாக்குகளை பெற்றுள்ளேன்." என்றார். அமைச்சர் கருப்பணன் மீது எந்த நடவடிக்கையும் உங்கள் கட்சி எடுக்கவில்லையென்றால் உங்களின்அடுத்த திட்டம் என நாம் கேட்டதற்கு "ஹா..ஹா..ஹா.. என சிரித்தபடியே பிறகு பேசுவோம்" என்றார்.
இந்த டிமாண்ட் எம்.எல்.ஏ. போல் இன்னும் அ.தி.மு.க.வில் சில டிமாண்ட் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளிவரப்போகிறார்கள் என்று மற்றொரு கொங்கு மண்டல எம்.எல்.ஏ.ஒருவர் சமிக்கையுடன் பேசினார். முதல்வர் நாற்காலியை கெட்டியாக பிடிக்க டிமான்ட் எம்.எல்.ஏ.க்களின் கத்திகள் எடப்பாடி பழனிச்சாமியை கற்றிசுழல தொடங்கிவிட்டது.