Skip to main content

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

The governor must decide on the release of Perarivalan! Supreme Court order

 

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க கால தாமதம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (07.12.2021) அறிவுறுத்தியுள்ளது. 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேராறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. 2018இலிருந்து இந்தக் கோப்பின் மீது தனது முடிவை தெரிவிக்காமல் காலதாமதம் செய்துவருகிறது தமிழ்நாடு ராஜ்பவன். 

 

குறிப்பாக, முந்தைய ஆளுநர் பன்வாரிலால் இந்த தீர்மானத்தைக் கிடப்பில் வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவியும் அதன் மீது கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் அவரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து முடிவெடுக்க அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார். இது ஒருபுறமிருக்க, ஆளுநரின் கால தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பேரறிவாளன். 

 

அதுகுறித்த விசாரணை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (07.12.2021) விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளர் தரப்பில், “முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவருகிறேன். என்னை விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பான தமிழக அரசு தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதன் மீது முடிவெடுக்காமல் கால தாமதம் செய்துவருகிறார். முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது. 

 

அதேபோல, தமிழ்நாடு அரசு சார்பில், “7 பேர் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார். அதன் மீது அவர் முடிவெடுக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கின் விசாரணையை ஒருவாரம் தள்ளிவைக்கக் கோரியிருந்தனர். மூன்று தரப்பின் வாதங்களையும் அடுத்து பேசிய நீதிபதிகள், “பேரறிவாளன் விடுதலை மீது ஆளுநர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என ஏற்கனவே 2018இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், அவரை விடுதலை செய்வதா? வேண்டாமா? என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. அதேசமயம் முடிவெடுக்க கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது. அதனால், தமிழக அரசின் தீர்மானத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்” என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்