கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மெத்தனால் ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம் லால் ஜெயின், மெத்தனாலை விநியோகம் செய்த சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனாலை வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான் பாட்ஷா (வயது 52) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள 223 பேரில் 90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து 156 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.