Skip to main content

மொய் விருந்தில் கிடைத்த ரூ.31 லட்சத்தை சிவன் கோயில் கட்ட நிதியாக வழங்கிய சிவபக்தர் குடும்பம்!!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021
The family of Shiva devotees donated Rs. 31 lakhs to build a Shiva temple

 

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் கரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டு ஆவணி மாதம் மொய் விருந்துகள் நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் தற்போது, 30 பேர் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடியம்மன் கோயில் திடலில்  மொய் விருந்து நடத்தினார்கள். ஒவ்வொருவரும் சுமார் ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரை மொய் வசூல் செய்தனர். இந்த மொய் விருந்தில் வெளிநாட்டில் வேலை செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த பாலவேலாயுதமும் இணைந்து நடத்தினார். அவர் வெளிநாட்டில் இருப்பதால் மொய் விருந்து நிகழ்ச்சியில் அவரது மனைவி விக்டோரியா மற்றும் அவரது மகன் லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மொய் வசூல் செய்தனர்.

 

மொய் விருந்து முடிந்து மொய் பணம் எண்ணிக் கணக்கிடப்பட்டு மொத்த செலவு தொகைகள், அனைவரும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அனைவரும் பணத்துடன் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் நிலையில், பாலவேலாயுதம் தாய், பேரக்குழந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் வந்து தங்களுக்கு கிடைத்த மொய் பணத்தில் விருந்து செலவு தொகை போக மிதியிருந்த ரூ.31,64,171ஐ ஒரு வெள்ளை துண்டில் வைத்து கட்டி அப்படியே சிவன் கோயில் திருப்பணிக் குழுவினரிடம் கொடுத்தனர். இதைப் பார்த்த அனைவரும் நெகிழ்ந்து பாலவேலாயுதம் குடும்பத்தினருக்கு நன்றி கூறினர்.

 

The family of Shiva devotees donated Rs. 31 lakhs to build a Shiva temple
                                                         பாலவேலாயுதம் தம்பதி

 

இது குறித்து பாலவேலாயுதம் மகன் லிங்கேஸ்வரன் கூறும் போது; “எங்கள் குடும்பம் சிவபக்தியான குடும்பம். பாட்டியும், அப்பாவும் கைலாயம் வரை போய் வந்தவர்கள். எங்கள் ஊரில் உள்ள சிவாலயம் திருப்பணி தொடங்கி 3 வருடமாக நடக்கிறது. ஏற்கனவே எங்கள் அப்பா ரூ.16 லட்சம் கொடுத்திருந்தார். இப்ப மொய் விருந்து வைக்க ஏற்பாடு நடக்கும் போதே மொய் பணத்தையும் முழுமையாக கொடுப்போம் என்றார். எங்கள் பாட்டி உள்பட குடும்பத்தினர், அனைவரும் சரி என்றோம். அதன்படி மொய் வசூல் ரூ.32 லட்சத்தில் விருந்து செலவு போக மீதியுள்ள ரூ.31,64,171ஐ எங்கள் குடும்பத்தினர் திருப்பணிக் குழுவிடம் கொடுத்தோம். இதற்கு முன்பு நெடுவாசல் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் கொடுத்திருந்தோம்” என்றார். மொய் பணத்தை திருப்பணிக்குக் கொடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்