நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ பேசுகையில், ''ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஈவிஎம் மிஷின்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உள்ள வாக்குச் சாவடிகளுக்கு நாளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் தேர்தல் பணியாளர்கள் நாளை மாலைக்குள் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்குச் சென்று சேருவார்கள். பாதுகாப்பு நடவடிக்கைக்காக போலீசார், துணை ராணுவ படையினர் எந்தெந்த பகுதிகளில் இருக்க வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 68,000 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. அதில் 45 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் எங்கெங்கு இன்டர்நெட், ரிசப்ஷன் எல்லாம் நன்றாக இருக்குமோ அங்கெல்லாம் வாக்குச்சாவடியைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி மூலமாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக ரேம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளருமே தவறாமல் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.