![Electric accident in Vinayagar Chaturthi procession...](http://image.nakkheeran.in/cdn/farfuture/NobIlQ3_pRNmcVSa6Z3vI3og2nMkhhgrmCeFt41aago/1662205229/sites/default/files/inline-images/N935.jpg)
விநாயகர் சதுர்த்தியும் முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கும் முன்பு ராஜபாளையம் அருகே சொக்கனாமுத்தூர் பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வல நிகழ்ச்சியின் இறுதியில் சப்பரத்தில் ஏற்பட்ட மின்விபத்தில் முனீஸ்வரன் மற்றும் மாரிமுத்து என்ற இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இதேபோல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள இசுக்ககழிகாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்தினர். அருகில் உள்ள ஏரிக்கரையில் விநாயகர் சிலையை கரைக்க எடுத்து சென்றனர். அப்பொழுது ஸ்பீக்கர் பாக்ஸ் வைத்து கொண்டு நடனமாடியபடியே சென்றுள்ளனர். அப்பொழுது அதேபகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு பயின்று வந்த திலீப் என்ற மாணவன் அதில் கலந்துகொண்டு நடனமாடியுள்ளான். அவர்கள் கொண்டு சென்ற ஸ்பீக்கர் பாக்ஸின் வயர் அறுந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் காலை வைத்த சிறுவன் திலீப் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தற்பொழுது அவனது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.