Skip to main content

அமளிதுமளியால் அல்லோலப்பட்ட எட்டு வழிச்சாலை விசாரணைக் கூட்டம்!; அதிகாரிகள் டென்ஷன்!!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

 

 

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக, சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான சட்டப்பூர்வமான விசாரணை இன்று (ஜூலை 6, 2018) சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நடந்தது.

 

 

 

 

மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்புக்கான அதிகாரம் பெற்ற அலுவலருமான சுகுமார், நில உரிமையாளர்களிடம் நேரில் கருத்துகளைக் கேட்டறிந்தார். வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னக்கவுண்டாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்தம் 169 பட்டாதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. விசாரணைக்கு வந்தவர்களிடம் எட்டு வழிச்சாலையால் எத்தனை ஏக்கர் நிலம் பறிபோகிறது?, குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்? நிலம் கூட்டுப்பட்டாவாக இருக்கிறதா? தனித்தனியாக கிரயம் செய்யப்பட்டுள்ளதா? மகன், மகள்கள் இருந்தால் அவர்கள் என்ன படித்திருக்கின்றனர்? நிலம் கொடுக்க சம்மதமா? இழப்பீடு தொகையை யார் பெயரில் வழங்குவது? என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டார். 

 

 

விசாரணை அரங்கத்தில் நடந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொருவருக்கும் சராசரியாக 5 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. நிலம் கொடுப்பதில் ஆட்சேபனை இருப்பின் அதையும் எழுதிக் கொடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். பெரும்பாலான விவசாயிகள் நிலம் கொடுக்க விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் விசாரணைக்கு வந்திருந்த ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தனம் என்ற மூதாட்டி, ''எங்களுக்குச் சொந்தமாக இருக்கிறதே ஒரே ஒரு வீடுதான். அதுவும் எட்டுவழிச்சாலைக்காக எடுத்துக்க போறாங்க,'' என்றவர் பின்னர் ஆவேசமாக பேசத் தொடங்கினார்.

 

 

அப்போது அவர், ''இங்கிருந்து உற்பத்தி ஆகும் அரிசி வெளியூருக்கு போகுது. பருப்பு வெளியூருக்கு போகுது. மிளகு, எல்லா நாட்டுக்கும் போகுது. நிலம், கிணறு எல்லாத்தையும் அழிச்சிட்டு ரோடு தேவையா? அது இல்லேனா உயிர் வாழ முடியுமா? தண்ணீர் இல்லேனா உயிர் வாழ முடியுமா? இந்த ரோடு தேவையா? மலையைக் குடையறதுக்கு நிலத்தைக் குடைகின்றனர். 

 

 

 

 

இப்படி நிலத்தை அழிச்சி ரோடு போட்டா எடப்பாடி பழனிசாமி எப்படி ஓட்டுக் கேட்டு வர முடியும்? அந்தக் காலத்திலேயே எம்ஜிஆர் பாடிட்டாரு. நல்ல பேரை வாங்கணும்னு பாடியிருக்காரு... தெரியுமா... நல்ல பேரை வாங்க ரொம்ப நாள் ஆகும். கெட்ட பேர் வாங்க ஒரு நிமிஷம் போதும்....

 

 

எத்தனை ஏக்கர் போகுது... எத்தனை மக்களுக்கு அது உணவுப் பொருளாகும்...  வெளிநாட்டுக்கெல்லாம் போகுது அரிசி. முதலமைச்சரு, மந்திரி, அதிகாரிங்க... கலெக்டரு எல்லாருமே சோத்தைதானே திங்கறோம். அது இல்லாம எப்படி உயிர் வாழ முடியும்? எட்டு வழிச்சாலை தேவையா? எங்க நிலம் எங்களுக்கு வேணும். உங்க சொத்தையா கேட்டோம்? அடுத்த எல க்ஷனுக்கு நீ வருவியா? மக்கள் மனசுல இடமே புடிக்க முடியாது,'' என்றார்.

 

 

மூதாட்டி தனம் பேசிக்கொண்டு இருக்கும்போதே மற்ற விவசாயிகள், 'எடுக்காதே எடுக்காதே நிலங்களை எடுக்காதே', 'விடமாட்டோம் விடமாட்டோம் எட்டு வழிச்சாலை விடமாட்டோம்', 'வாழவிடு வாழவிடு விவசாயிகளை வாழவிடு', என்று விவசாயிகள் அனைவரும் விசாரணை நடந்த மண்டப அரங்கத்திற்குள்ளேயே தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அனைவருமே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.

 

 

இந்த சலசலப்புகளால் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் விசாரணைக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி, ஊடகத்தினரை வெளியேற்றும்படி உடன் இருந்த அதிகாரிகளிடம் கூறினார். அவர்களும் ஊடகத்தினரை, ''இதுவரை பேட்டி எடுத்தது போதும். எல்லோரும் கொஞ்சம் வெளியே சென்றால் விசாரணை நடத்த வசதியாக இருக்கும்,'' என்றனர். இதனால் ஊடகத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

 

இது ஒருபுறம் இருக்க, அதிமுக நிர்வாகி மெடிக்கல் ராஜா திடீரென்று விசாரணை மண்டபத்திற்கு வந்து, ''எட்டு வழிச்சாலையால் அரசுப்பள்ளிக்கூடம்தானே போகுது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்?,'' என்றார்.

 

 

 

 

இதைக்கேட்ட ராமலிங்கபுரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு, ''உங்கள் பிள்ளைகளை நீங்கள் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் திமிரில் இப்படி பேசுவது சரியல்ல. நாங்கள் இங்குள்ள அரசுப்பள்ளியைத்தான் நம்பி இருக்கிறோம். மக்களே சொந்த காசை செலவழித்துக் கட்டிய பள்ளிக்கூடம் பறிபோவதை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருப்பது?,'' என்று கூறி அவரை விரட்டி அடித்தனர்.

 

 

இந்த சலசலப்புகளால் சற்று நேரம் விசாரணையை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடந்தது. இன்று மொத்தம் 101 பட்டாதாரர்களிடம் மட்டுமே விசாரணை நடந்தது. அதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடந்தது.

 

 

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''நில எடுப்புச்சட்டம் 1956 பிரிவு 3 (சி) (1)-ன் படி, ஆட்சேபனை மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது. இதற்குமேல் இந்த விசாரணை இந்த கிராம மக்களிடம் நடக்காது. விசாரணைக்கு வராதவர்கள் நிலம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக கருத்து பதிவு செய்யப்படும்,'' என்றனர்.

 

 

 

திமுக எம்எல்ஏ திடீர் கருத்து கேட்பு!

 

சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் திடீரென்று இன்று மாலை 4 மணியளவில் குள்ளம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், சீரிக்காடு, அடிமலைப்புதூர், வெள்ளியம்பட்டி, பருத்திக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் பரவலாக கருத்துகளைக் கேட்டறிந்தார். நிலம் பறிபோகும் நிலையில் உள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எம்எல்ஏவிடம் வழங்கினர்.

சார்ந்த செய்திகள்