தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் பணி நீக்கம் செய்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தானாக முன்வந்து செய்த விசாரணை அடிப்படையில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏ.டி.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன் ஆகியோர் நேற்று காலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மாலையில் அவர்கள் இருவருக்கும் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து மீண்டும் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் எதிர்கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திமுக தெற்கு மா செ (பொ) ரகுபதி எம்எல்ஏ தலைமையில், வடக்கு மா.செ. செல்லப்பாண்டியன், ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், மதிமுக மா.செ. சந்திரசேகரன், மற்றும் சிபிஐ, சிபிஎம், மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் விவாதங்களுக்கு பிறகு சாத்தான்குளம் சம்பவத்தினால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏ.டி.எஸ்.பி. குமார் மற்றும் டி.எஸ்.பி. பிரதாபன் ஆகியோரை அடுத்த 3 மணி நேரத்தில் பணியிடம் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அவர்களின் பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தவறினால் புதுக்கோட்டை மாவட்ட மக்களை திரட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.