தலைநகரத்தையே அதிரவைத்த நாய்க்கறி சர்ச்சையில் "சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி என்று நாங்கள் சொல்லவில்லை" என்று மறுத்துவருகிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 'கறி பார்சல்'கள் ஆட்டுக்கறிபோல் இல்லை என்ற சந்தேகம் எழுந்ததால் சென்னை வெப்பேரியிலுள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
இந்தநிலையில் ரயிலில் கொண்டுவரப்பட்டது நாய்க்கறியா? அல்லது ஆட்டுக்கறியா? என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய 2100 கிலோ இறைச்சியின் உண்மை தன்மையை பற்றி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.