தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.
உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் 'துணை முதலமைச்சர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார். அதேபோல் உதயநிதி நடித்த மாமன்னன் படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ், 'உதயநிதியின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமானன கமல்ஹாசன், 'நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் உறுதிமொழி எடுத்துக் கொண்டீர்கள். அவர்கள் இருவருக்கும் நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார். 'இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரரே' என உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'துணை முதல்வராக இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்' என நடிகர் சிலம்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்