இன்று (ஏப்ரல் 19) பரிணாமவியலின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் டார்வினின் நினைவு நாள்.
உயிரினங்களின் தோற்றமானது முழுக்க முழுக்க இயற்கையானது எனவும், மனிதனும் குரங்கும் ஒரே உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தையும் டார்வின் வெளியிட்டார். உயிரினங்களின் தோற்றத்திற்கு காரணம் கடவுள் என்று காலம் காலமாக கூறிவந்த மதவாதிகள் இக்கருத்தினை எதிர்த்தனர். அவரோ, தகுந்த விளங்கங்கள் அளித்தார். அனைத்து உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, சின்ன உயிரிகளில் இருந்து பெரிய உயிரியாக மாறி, ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விலங்கினமாக மாறி, இன்றைய உருவத்தை எட்டியுள்ளன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அதன்பிறகே, அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இயற்கையியல் ஆராய்ச்சியாளரான சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களை ஆராய்ந்துதான், பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டார். சூழ்நிலைக்கேற்ப தகவமைத்தபடி வாழும் உயிரினமே உயிர் பிழைக்கும் என்று விளக்கியவரும், அவரே.
கரோனா ஊரடங்கு அறிவித்ததிலிருந்து, மதுரை – அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை பக்கம் ஆள்நடமாட்டமே இல்லாமல் போனது. இங்கு மலையில் சுற்றித்திரியும் குரங்குகள், இவ்விரு கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அளிப்பதை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. பக்தர்கள் வருகை சுத்தமாக நின்றுபோனதால், தேவைக்கேற்ப உணவு கிடைக்காமல் போக, குரங்குகளின் ‘க்ரீச்.. க்ரீச்.’ சத்தம் மலையெங்கும் எதிரொலித்தன. இதனை அறிந்த சிலர், அழகர் கோவில் மலைக்குச் சென்றனர். கேரட், தக்காளி, பொரிகடலை, கடலை மிட்டாய், வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களை எடுத்துச்சென்று குரங்குகளுக்கு அளித்தனர். உண்ட திருப்தியில் அவையனைத்தும் குதூகலித்தன.
ஊரடங்கு நேரத்தில், ஆதரவற்றோருக்கு பலரும் உணவுப்பொட்டலங்கள் வழங்கி வரும் நிலையில், அழகர்கோவில் சென்று குரங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தவர்களின் மனிதநேயம் சிலிர்க்க வைக்கிறது.
எல்லோரிலும் ஆன்மா உறைகிறது என்பதை உணர்ந்து, மனிதர்களைப் போலவே மிருகங்களிடமும் தோழமையாக இருந்த மகான்கள் நம்மிடையை வாழ்ந்திருக்கின்றனர். மிருகங்களிடம் மட்டுமல்ல, பறவைகள், பூச்சிகளிடமும் கூட மகான்கள் கருணை காட்டியுள்ளனர். தவவலிமை மிக்க தேசம் என்ற பெருமைக்குரிய இந்தியாவையும் கரோனா விட்டுவைக்கவில்லைதான். ஆனாலும், கொடிய கரோனா வைரஸை நம்மக்களின் மனிதநேயம், ஆரோக்கியமான சவாலாக எதிர்கொண்டு வருகிறது.