கடந்த 17 -ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் பா.ஜ.க சார்பில் பிரதமரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதே நாளில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவும் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ராதாரவி பேசுகையில், நல்லது பிறந்த அதே நாளில்தான் கெட்டதும் பிறந்திருக்கிறது எனப் பேசியுள்ளார். மேலும் தான் பெரியாரை இழிவு படுத்தியதாக மற்றவர்கள் சொன்னால் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியது, "கடந்த 17 ஆம் தேதி மோடிஜியின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்த நாளும் கூட, அதேபோல் அன்று என் தந்தையார் மறைந்த நாள். அதனால்தான் 17ஆம் தேதி நான் கலந்துகொள்ள வரவில்லை. அற்புதமான பல திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் மோடி. பெரியாருடைய பிறந்தநாள், அது தவறல்ல. ஒரு நல்லது பிறந்தால் ஒரு கெட்டதும் பிறக்கும். அதைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சொன்னவுடன் தந்தை பெரியாரை கெட்டது எனச் சொல்கிறார் ராதாரவி அப்படியென்று சொல்வார்கள். அவர்கள் சொல்வதில் ஒன்றும் தவறில்லை. 67 ஆண்டுகள் நான் மகுடி ஊதிய பாம்பாக வாழ்ந்து கொண்டிருந்த காலங்கள். அதையெல்லாம் மறந்து, மோடி செய்யும் நன்மைகளைப் பார்த்து பா.ஜ.கவிற்கு வந்தவன். மோடியைப் பார்த்து தான் பா.ஜ.கவில் வந்து சேர்ந்தேன். அவர்மட்டும் தான், இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்பதால் தான் நான் வந்து சேர்ந்தேன்.
பல நல்ல திட்டங்களை, குறிப்பாக மும்மொழிக் கொள்கை எனச் சீரும் சிறப்புமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதைப் பற்றி தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்மைகளைச் சொல்வதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. இதனால்தான், தமிழ்நாடு தேய்ந்து கொண்டிருக்கிறது. நடக்கவிருக்கும் தேர்தலில் தாமரை சின்னம் நிச்சயமாக தமிழ்நாட்டில் மலரும். அவர்கள் தமிழ்நாட்டில் பாதம் பதிப்பார்கள் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. தேர்தல் நேரத்தில் எது என்னவாக இருக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் பாதம் பதிப்பார்கள். ஏனென்றால் இளைஞர்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் என எல்லாருமே நம்பிக்கொண்டிருப்பது மோடியை மட்டும்தான். படித்தவர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது மோடிக்கு.
ரஜினிகாந்த் கூட நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்னைப் பார்த்து எல்லோரும் சொல்வார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூட சொல்லுவார்... இதைப் பேசுகிறவர் ராதாரவி எனும் நடிகர்தானே என்று, அவர் கூட நடிகர்தான். ஸ்டாலினும் 2 படத்தில் நடித்தவர்தான். அதேபோல அவரது மகனும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரும் நடிகர் இல்லையா. அவர் என்ன பிறப்பிலேயே அரசியல்வாதியா? தி.மு.க வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்தும் காரணம். அப்பொழுது அவர் நடிகர் இல்லையா? அப்பொழுது தித்தித்தது இப்பொழுது கசக்கிறதா.
பல நல்லவர்கள் பா.ஜ.கவில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது சகோதரர் அண்ணாமலை எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் எல்லாம் யோசித்து தான் சேர்ந்திருக்கிறார்கள். அவரெல்லாம் ஐ.ஏ.எஸ் படித்தவர். நிறைய பேர் வருகிறார்கள். சினிமாவில் கூட நிறைய பேர் வந்து சேருகிறார்கள். என்னை பார்த்து ஒருவர் கேள்வி கேட்டார்... மோடியை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று, கடவுளை பார்த்து இருக்கிறாயா என்று கேட்டேன் நான். அதே மாதிரிதான் மோடியும், நான் அவரைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் இருக்கக்கூடிய இயக்கத்தைப் பற்றிப் படித்துக்கொள்ள வேண்டும். இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்கள் அனைவருமே ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் எனச் சொல்லும் பொழுது நாம் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துச் சொல்ல வில்லை. இந்தியர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒன்று சேரவேண்டும். இந்தியராக இருக்கும் வரை, நான் ஒரு முஸ்லீம் இந்தியன், நான் ஒரு கிறிஸ்டின் இந்தியன் அப்படிச் சொன்னால் ஒழிய பி.ஜே.பி.யின் ஆதரவு கிடைக்காது. இந்தியன் என்று சொல்லக் கற்றுக் கொள். இந்தியாவைக் கூறுபோட வேண்டாம்.
சிலர் சொல்கிறார்கள் தமிழ் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று. தமிழ்நாட்டிற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தண்ணீர் வருகிறது. அப்புறம் கழுவக்கூட தண்ணீர் இருக்காது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் மோடி, தேசிய நீரோட்டத்திற்குப் போகிறார். இப்பொழுது கூட விவசாயத்திற்காக ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதை நான் இன்னும் படிக்கவில்லை நேத்துதான் சொன்னார்கள். அது என்னவென்று தெரிந்து கொண்டு நான் நிச்சயமாக அதனுடைய விளக்கத்தைச் சொல்கிறேன். முதல்வர் எடப்பாடி ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் சொல்லியிருக்கிறார், அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அதை தி.மு.க தலைவர் தவறாக மாற்றிப் பேசுகிறார்.
நான் கூட தான் சொன்னேன் முதலமைச்சராக வரும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டு என்று. இப்போது இல்லை என்று தெரிகிறது. முதலமைச்சராக அவரால் வர முடியாது. தி.மு.க இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. நடிகர் சூர்யா இப்போது வசதி வந்தவராக இருக்கலாம். நேற்றுவரை பேசவில்லை இப்பொழுது சொல்கிறார், நீட்டைப் பிடிக்கவில்லை. இதற்கு ரீசன் சொல்ல சொல்லுங்க. அகரம் ஃபவுண்டேசனில் அவர் கூட எங்களுக்கு ஹெல்ப் பண்ணினவர். நான் மறக்கவே மாட்டேன். 'சிங்கம்' படம் நடிக்கும் பொழுது, ஒருவருக்காக நான் ஒரு லட்ச ரூபாய் கேட்டேன், அப்பொழுது அவர் அந்த ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதற்கு ஹாஸ்பிடலில் சென்று பேஷண்டை செக் பண்ணாங்க எல்லாவற்றுக்குமே ஒரு ப்ரொசீஜர் இருக்கிறது.
அப்பொழுது நீட் பற்றி தெரியாமல் பேசுகிறாரா சூர்யா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,
அவர் பேசுவது எல்லாமே தெரியாமல் தான் பேசுகிறார். நீட் மட்டுமல்ல அவர் எதைப் பேசினாலும் தெரியாமல் தான் பேசுகிறார். அவருடைய மனைவி சொன்னார்கள் கோவிலுக்குப் பதிலாக பள்ளிக்கு, ஹாஸ்பிடலுக்குச் செலவிடுங்கள் என்று, அந்த நேரத்தில் பளிச்சென்று இந்த விஷயங்கள் தெரியும். ஆனால் அதில் உள்நோக்கமாக நுழைந்து பார்த்தீர்கள் என்றால் அவர்கள் பேசியது தப்பு என்று தெரியும். கோவிலுக்குப் பதிலாக பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று சொன்னார்கள் என்றால் ராஜராஜ சோழன் என்ன முட்டாளா?
இப்பொழுது ஹாஸ்பிட்டலுக்கு பணம் கொடுத்தார்கள். ஒரு இடத்தில் மட்டும் 25 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். மொத்த ஆஸ்பிட்டலுக்கு கொடுக்க வேண்டியதுதானே. இப்பொழுது தொழிலாளர்களுக்கு 90 லட்சம் ரூபாய் கொடுத்தார் சூர்யா. அதை நான் பாராட்டுகிறேன். அதைப் பிரித்துப்பாருங்கள் நானூறு நானூறு ரூபாய் தான். அதை வாங்கும் போது என்னுடைய தொழிலாளர் நண்பர் ஒருவர் சொல்கிறார், என்னங்க வெறும் 400 ரூபாய் கொடுக்கிறார். ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று கேட்கிறார்.
அவங்கவங்க படம் ஓட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள். எல்லாருமே புரட்சித் தலைவரைப் போல் இல்லை. தி.மு.கவை வளர்த்தவர் புரட்சித்தலைவர். 'பறக்கவேண்டும் நாட்டில் அன்னக்கொடி' என்றார். ஆனால் பின்புறத்தில் எல்லாக் கொடிகளும் பறக்கும். தி.மு.க கொடியும் பறக்கும். அது தான் சொல்லும் விதம். இனிமேல் ஜோதிகா நடித்த படமும், சூர்யா நடித்த படமும், விஜய் நடித்த படமும் தேர்தல் நேரத்தில் வெளியே வராது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.