கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. கடந்த 7 மாதங்களாக ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றதில் இருந்து ஊராட்சிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்கவில்லை, இதனால் ஊராட்சி நிர்வாகங்கள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் ஊராட்சி செயலாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை. ஊராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் குடிநீர், தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு ஊராட்சி மன்ற தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடுவதால் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் பரவியது. அதையடுத்து விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் காலை முதல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதியம் 12 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். அப்போது அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் கோரிக்கைகளை தெரிவித்துவிட்டு செல்வதாக கூறி உள்ளே சென்றனர்.
அப்போது ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரும் இல்லாததால் அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊராட்சி மன்றத் தலைவர்களை காலையிலிருந்து ஏன் உள்ளே விடாமல் அனுமதி மறுத்தீர்கள் என தலைவர்கள் கேட்டனர்.
அதற்கு போலீசார் நீங்கள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவா, அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுவரை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறியதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அதனை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததுடன், விரைவில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.