கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கிருமி நாசினி தெளித்து சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கரோனா சிறப்பு வார்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் 20 பேர் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் சிறப்பு வார்டில் இருந்த 20 பேரில் 5 பேர் பூரண குணம் அடைந்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு சென்று பூரண குணமடைந்த 5 பேர்களுக்கு பழங்கள் மற்றும் முக்கவசம் வழங்கி மகிழ்ச்சியுடன் கை தட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் கீதா, சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன். பதிவாளர் கிருஷ்ணமோகன் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம். வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.