கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். தனது வீட்டுக்கு அருகே நாட்டுக்கோழிகளையும் 10 சண்டை கோழிகளையும் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் கோழிகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். கோழி வளர்ப்பதற்காகத் தனியாகக் கூண்டுகள் உள்ளிட்டவற்றையும் அமைத்து கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்.
பகல் நேரங்களில் அவரது தோட்டத்தில் கோழிகள் மேய்ச்சலுக்குச் செல்லும், இரவு நேரங்களில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும். இப்படி வளர்த்து வந்த நாட்டுக் கோழிகளை இறைச்சிக்காக விற்பது வாடிக்கை. மேலும், நாட்டு மருத்துவத்திற்காக அந்த கோழிகளின் முட்டைகளை அப்பகுதி மக்கள் வாங்கிச் செல்வார்கள். இப்படி வளர்க்கப்பட்டு வந்த கோழிகளில் 50க்கும் மேற்பட்ட கோழிகள் நேற்று வாயில் ரத்தம் கக்கியவாறு அடுத்தடுத்த இறந்து விழுந்துள்ளன. இதனால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், கோழிகள் இறந்து கிடந்த பகுதியில் கறித்துண்டுகள் (மாமிசம்) சிதறிக்கிடந்துள்ளன. இதை சுரேஷ் குடும்பத்தினர் கண்டெடுத்துள்ளனர். இதனால் அந்த கறித்துண்டுகளில் ஏதாவது விஷம் தடவி வேண்டுமென்றே யாரோ கோழிகளைக் கொல்வதற்குக் கொண்டுவந்து போட்டு விட்டுப்போய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருநாவலூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சடைய பிள்ளை, தலைமையிலான காவல்துறையினர் கோழிகள் இறந்து கிடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், முன்விரோதம் காரணமாகக் கோழிகளைக் கொல்லப்பட்டதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோழிகள் திடீர் இறப்புக்கு என்ன காரணம் என்பதை அறிய கால்நடை மருத்துவர் இந்த கோழிகளைப் பிரேதப் பரிசோதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.